Pages

June 29, 2008

பெங்களுரு உலா

வேலை வேலை அப்படியோரு வேலை சென்ற வாரம். (அப்படியும் நண்பர்கள் பலரின் வலைப்பதிவுகளுக்கெல்லாம் போய் பின்னூட்டம் மட்டும் போட்டுட்டுவேன்) அதிலும் இந்த வாரம் கொரியாவிலிருந்து ஓர் அழையா விருந்தாளி வருகிறானாம். என் தலையெழுத்து, அவனை நான் தான் என்டெர்டைன் செய்யணும். அப்பாடா ஒரு வழியா வெள்ளிக்கிழமை முடிட்ந்ததே. இரண்டு நாள் நிம்மதியா வீட்டிலேயே இருக்கலாம் என்று வந்தால், காத்திருந்தது ஒரு இடி. நான் வீட்டுக்கடன் வாங்கியிருக்கற வங்கியிலிருந்து ஒரு ஓலை. "நீங்க கட்டும் பணம், வட்டிக்கே போதவில்லை. அசல் குறையவேயில்லை, ஏறத்தான் செய்கிறது. நேரில் வந்து சரி செய்யவும்". இல்லையேல் விளைவுகள் விபரீதம் என்று சொல்லாத குறை.
வீட்டுக்கடன் பற்றிய விஷயங்களிலெல்லாம் என் மைத்துனர் பெரிய ஜாம்பவான். அவரையும் அழைத்துக் கொண்டு ஓடினேன். வங்கியிருக்கும் இடம் மல்லேஷ்வரம். என் வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர்.வங்கிக்குச் சென்று செலுத்த வேண்டிய எக்ஸ்ட்ரா பணத்தை (மனதிற்குள் திட்டிக்கொண்டே) செலுத்த வேண்டியானது. "சரி இவ்வளவு தூரம் வந்தாச்சே, அப்படியே புதுசா கட்டியிருக்கும் விமான நிலையம் இன்னாமாத் தான் இருக்குன்னு" பார்க்க ஒரு ஆர்வம். மேகரி சர்கிள் அடைந்தவுடனே, தேவனஹள்ளி 31 கிலோமீட்டர் என்று போர்ட் பார்த்ததுமே திரும்பியிருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு அசட்டு தைரியத்தில் மேலும் பயணித்தோம். நல்ல வேளை, டூ வீலரில் வந்திருந்ததால் நெளிந்து நெளிந்து செல்ல முடிந்தது. ஹெப்பால் மேம்பாலம் சென்றடையும் வரை போராட்டம் தான். முன்னால் ஒரு 200-300 மீட்டருக்கு எதுவுமே நகரவில்லை. ஹெப்பால் மேம்பாலம் தாண்டிய பிறகு தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது.
என்ன தான் நமக்கு பெங்களுருவில்லுள்ள டிராஃபிக்கில் ஓட்டுவது சிரமமாக இருந்தாலும் சில அதிசயமான விஷயங்கள் சாலையில் காண முடிந்தது. பாவம் படிக்க வேண்டிய ஒரு பையன், இப்படி உழைத்து ஓய்வெடுக்கக் கூட நேரம் கிடைக்கவில்லை போலும். பாருங்கள் இவன் ஓய்வெடுக்கும் இடத்தை. வருமைக்கோட்டுக்குக் கீழே கூட மக்கள் வாழ்கிறார்கள். இவன் வாழும் கோட்டை என்னவென்று சொல்வது?
ஹெப்பால் பாலம் மீதேறியவுடன், அதற்கப்பால் பெட்ரொனஸ் டவர் போல் ஒரு கட்டிடம். என்ன கட்டிடம் என்று தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு அந்தக்காட்சி ரம்மியமாக இருந்தது. இது என்ன கட்டிடம் என்று யாராவது சொன்னால் புண்ணியமாகப் போகும்.

புதிய விமான நிலையத்திற்கு உருப்படியா சாலைகளில்லை என்று செய்தித்தாள்களிலே பத்தி பத்தியாக எழுதினாலும், சாலைகள் அகலமாகவும் விசாலமாகவும் ஆறுவழிப் பாதைகளாக இருக்கிறது. நிஜமாகவே அயல்நாட்டில் பயணம் செய்யும் ஃபீலிங்க் தான்.
அதிலும் NH-4 லிருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வெளிப்பாதை(exit route) Simply Superb.

இருந்தாலும் இந்த ஆறுவழிப்பதையில் 4-5 சிக்னல் இருப்பது தான் உறுத்தலான விஷயம். 90 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென சிக்னல் வருவது சற்றே சிரமமான விஷயம்.

ஒரு வழியாக 90 கிலோமீட்டர் வேகத்தில் வண்டியைச் செலுத்தி ஒரு மணி நேரத்தில் புதிய விமான நிலையம் வந்தடடைந்தோம். வந்த பிறகு தான் தெரிந்தது விமான நிலையத்தைப்பற்றி நாளிதழ்களெல்லாம் ஓவர் பில்ட் அப் கொடுத்திருக்கிறார்கள் என்று. அப்படியொன்றும் ஆஹா ஓஹோ விமான நிலையம் ஒன்றும் இல்லை. பாங்காக்கில் இருக்கும் விமான நிலையம் கூட இதை விட
நன்றாக இருக்கும். இது ஒன்றும் சிங்கபூரோ அல்லது
மலேசிய விமான நிலையத்திற்கு ஈடு
இணையானதில்லை.
இருந்தாலும் பழைய விமான நிலையத்திற்கு இது நன்றாகவே இருக்கிறது. அவ்வளவு தான்.

வெளியிலேயே நின்று இங்கே அங்கே கொஞ்சம் நோட்டம் விட்டு, திரும்பலானோம்.
வரும் வழியில் தான் விதி டிராஃபிக் என்னும் ரூபத்தில் விளையாட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் 15 நிமிடத்திற்கு ஒன்றுமே நகரவில்லை.
ஆனாலும் இந்த லாரிக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஒரு பழுதடைந்த லாரியை இன்னொன்று எப்படி இழுத்துச் செல்கிறது பாருங்கள்?
ஒரு வழியாக முட்டி மோதி 4 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம்.









சொல்லிக்காம கொள்ளிக்காம ஊரெல்லாம் சுற்றி விட்டு வீடு வந்ததால் மேலிடத்தில் வாங்கிக்கட்டிக்கொண்டது வேறு கதை.

பெங்களுரில் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு சில டிப்ஸ். (ச, நானும் டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டேன்).
  • ஹெப்பால் பாலத்திலிருந்து விமான நிலையம் 28 கிலோ மீட்டர். இங்கிருந்து விமான நிலையம் சென்றடைய 1 மணி நேரம் ஆகிறது. பெங்களுருவில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் போக்குவரத்து நெரிசலில் ஹெப்பால் வரை செல்வது பிரம்மப் பிரயத்னம் தான்.
  • பெங்களூரிலிருந்து அநேகமாக எல்லா இடத்திலிருந்தும் விமான நிலையம் செல்ல வொல்வோ பேரூந்து விட்டிருக்கிறது BMTC.
  • பேரூந்து நிலையம் வரை செல்ல முடியவில்லையென்றால் Airlift என்ற நிறுவனத்தார் (Innova கார்) டாக்ஸி சேவை செய்கிறார்கள். ஆறு பேர் செல்லலாம். www.airlift.com என்ற இணையதளத்திற்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். நபர் ஒருவருக்கு 340 ரூபாய். உள்ளே அளுக்கொரு LCD மானிடரில் படம் பார்க்கலாம். Wi-fi வசதியும் உள்ளது. அனைத்தும் இலவசம். விட்டிற்கு அருகில் வந்து ஏற்றிச் சென்று இறக்கி விடுகிறார்கள்.
  • அயல் நாடு செல்லும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னரே வீட்டை கிளம்பிவிடுவது நல்லது. பெங்களுரில் போக்குவரத்து நெரிசல் எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.
Happy Flying from Bengaluru International Airport

June 19, 2008

ஆழ்வார்க்கடியான் தசாவதாரம் பார்க்கிறான்

வைகுண்டத்திலே பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆழ்வார்க்கடியானிடம், யாரோ தசாவதாரம் பற்றி ஏதொ சொல்லித் தொலைக்க, மஹாவிஷ்ணுவிடம்கூட சொல்லிக்கொள்ளாமல் பூலோகம் வந்து விடுகிறான், தசாவதாரம் பார்க்க. (யாரிந்த ஆழ்வார்க்கடியான் என்று கேட்பவர்கள் முதலில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு இதைப் படிப்பது நல்லது)


நமது கதையின் நாயகன், "ஆழ்வார்க்கடியான்", பூலோகத்தில் தரையிறங்கிய இடம், சிங்காரச் சென்னை. நேரே தசாவதாரம் திரையிடப்பட்டிருக்கும் அரங்கம் நோக்கி விரைகிறாரன். சென்னை வாழ் மக்களுக்கெல்லாம் இவனைப் பார்த்தால் ஏதோ வேறொரு கிரகத்திலிருந்து வந்திருப்பவன் போல் எண்ணம். குட்டையாக தொந்தியுடன், முன் குடுமியும் கையில் தடியும் ஏந்தி நடந்தால் சென்னையில் யாருக்குத்தான் வியப்பு வராது?அதிலும் உடம்பு முழுக்க திருநாமப்பட்டை வேறு.


"ஓம் நமோ நாராயணாய!"

படம் ஆரம்பித்தவுடனேயே பெருமாளை பெயர்த்தெடுக்கும் பொழுது, "அடேய் பாதகர்களா! நாராயாணனைப் பெயர்த்தெடுக்கிறீர்களே! உங்கள் குலம் நாசமைடையும். நாராயாணனைக்காக்க பூலோகத்தில் எவருமே இல்லையா" வைணவத்தைக் காக்க ரங்கராஜன் நம்பி தோன்றியதும், "ஆஹா ஓர் மாவீரன் உதித்து விட்டான். அன்று இந்த திருமலை நம்பி இருந்தான். இன்று ரங்கராஜன் நம்பி. பெருமாளின் மஹிமையே மஹிமை"


குலோத்துங்கன் சோழன், "ரங்கராஜன் நம்பி, சிவனே முழு முதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டு ஓம் நமச்சிவாய என்று சொல் உன்னை விட்டுவிடுகிறேன்"
"அடேய் குலோத்துங்கா, உன் முப்பாட்டனாருக்கு முப்பாட்டன், மஹாசமுத்திரம்போல் அலையெழுப்பும் ஏரிக்கு வீரநாராயண ஏறி என்று பெயர் வைத்தாரே. சைவமும் வைணவமும் தழைக்க வேண்டும் இத்தவத்திருநாட்டிலே என்று ஆசைப்பாட்டரே. அவர் கீர்த்திக்குத் தீங்கு விளைவிக்காதேடா. உன் குலம் நாசமடையும். இது ஒரு வீர வைஷ்ணவனின் சாபம். ரங்க ராஜன் நம்பி எக்காலத்திலும் சைவத்திற்கு துணை போகாதே"

"யோ யாருய்யா அது படம் பாக்க வுடாம நொய் நொய்னு கத்திகினு. கம்முனு குந்துயா"


"பூலோகத்தில் வைணவம் அழிந்து விட்டதா? சைவர்களை எதிர்க்க ஒருவர் கூட இல்லையா? இப்படி வைணவத்தை எதிர்க்கும் இச்சித்திரத்தைப் பார்க்க வேண்டுமா?அடேய்! நாராயணனைப் பெயர்த்தெடுத்து கடலில் சேர்க்கிறார்கள். நீங்கள் என்னை இதெல்லாம் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாமல் இருக்கச் சொல்கிறீர்களா?" என்று சண்டைக்குச் செல்ல, அருகிலிருப்பவர்கள் அவனை சமாதனம் செய்து படத்தை பார்க்க வைக்கின்றனர்.

ஆழ்வார்க்கடியானுக்கு ஆங்கிலம் புரியாதலால் அருகிலிருப்பவரிடம், அர்த்தம் கேட்க அவன் அமெரிக்காவில் நடப்பதின் சாராம்சம் சொல்கிறான். "இத்த பாருய்யா இந்தாருக்காருல்லா விஞ்ஞானி கோவிந்து, இந்தாளு தான் உலகத்தையே காப்பாற்றதுக்கொசரம், இவ்வளவு ஓட்டம் ஓடுதாரு"

"என்ன இந்தப் பையனின் பெயர் கோவிந்தனா? ஆஹா என் பெருமாள் காக்கும் கடவுள் அல்லவா. அதனால் தான் இந்தப் பையனும், காக்கும் தெய்வமைய்யா"

முகுந்தா முகுந்தா என்று அசின் உருகும் போது ஆழ்வார்க்கடியானின் மனமும் சேர்ந்து உருகுகிறது. பக்திப் பரவசத்தில் மூழ்கித் திளைக்கிறான். "யாரிந்தக் குமரி, கண்ணனை நினைத்து என்னமாய் உருகுகிறாள்! ஒரு சாயலில் குந்தவைபிராட்டியார் போலவே இருக்கிறாளே"

கிருஷ்ணவேணிப்பாட்டி கிறுமி டப்பாவை பெருமாள் சிலைக்குள் போடுவதைப்பார்த்து, "பெருமாளே நீர் தான் உலகை ரட்சிக்க வேண்டும்" என்று வேண்டுகிறான். கிறுமி டப்பாவை அபகரிக்க வரும் க்ரிஸ் ஃப்லெட்சர் குறி தவறி யானையின் காலிலே சுட, யானை மதம் பிடித்தோடுகிறது. ஆழ்வார்க்கடியானுக்கு இதைப்பார்த்து தன்னை ஈழத்திலே துரத்திய யானை நினைவுக்கு வர, "அய்யோ யானைக்கு மதம் பிடித்து விட்டது. ஓடுங்கள் ஓடுங்கள்" என்று அலறுகிறான். "அய்ய. இது படம்யா. தொண தொணங்காம குந்துய்யா.

பெருமாளைத் தூக்கிக்கொண்டு அசினும் கமலும் ஓடும் போது, "ஆண்டாளே பெருமாளைக் காப்பாற்று. உனக்குக் கோடி புண்ணியமுண்டாகும்"

அசினை மானபங்கப்படும் காட்சியில், "கிருஷ்ணா. திரௌபதியின் மானம் காத்த ரக்ஷகா, உன் திருவுருவச்சிலையைக் காப்பாற்ற முனையும் இந்த அபலயை நீ தான் காக்க வேண்டும்" என்று ஓலமிட, அங்கே காட்சி தரும் வின்சென்ட் பூவராகனைப் பார்த்ததும், "ஆஹா, எம்பெருமானின் லீலையே லீலை. ஷ்யாமள வர்ண கிருஷ்ணனல்லவா மார்வேடத்தில் வந்து இப்பெண்ணின் மானம் காத்த கடவுள்"

அவ்வப்போது கடவுள் பற்றி விஞ்ஞானி கமலுக்கு சந்தேகம் வரும் பொழுது, "கோவிந்தனென்று நாராயணனின் பெயர் வைத்துக்கொண்டு, பெருமாள் இருக்கிறாரா என்று கேட்கிறாயே"
இறுதிக்காட்சியில் உலகை கிறுமி ஆயுத்தத்திலிருந்து காப்பாற்ற ஷிங்கன் நரஹஷி அமெரிக்க வில்லனிடம் மோதும் போது, "ஹிரண்யகஷிப்பை வதம் செய்த நரசிம்மர் அல்லவா அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்".

"அவ்வப்போது கடவுள் இருக்கிறாரா இருக்கிறாரா என்று கேட்டாலும், நடக்கும் காட்சிகள் எல்லாமே எம்பெருமானின் லீலைகள் போன்றே இருக்கிறதே. கோவிந்தன் ஓட்டிச் சென்ற வாகனம் மட்டும் விபத்துக்குள்ளாகாவிட்டால், இந்த அசுரனிடம் அகப்பட்டிருப்பார்களே. உலகை அழிவிக்கும் ஆயுத்தத்திலிருந்து காப்பாற்ற உப்பு நிறைய தேவைப்படும் சமயத்தில், கடலே பொங்கியெழுந்து கிறுமிகளனைத்தையும் அழித்து, ஆஹா இதுவல்லவோ பெருமாளின் செயல். ஆஹா இதோ அவரும் மேலே வந்து விட்டாரே. பெருமாளே ஜகத்ரட்சகா, உன்னை கடலுக்குள் தள்ளியவர்களை தண்டித்து, முப்பிறவியில் உன் திருநாமத்தை ஜபித்தே மாண்ட ரங்கராஜனையும் அவன் மனைவியையும் இப்பிறவியில் உன் திருவடிகளிலேயே மீண்டும் இணைத்து விட்டாயே. உன் லீலைகள் எல்லாம் சாமான்னிய மனிதனுக்கு புரிவதில்லையப்பா. உலகம் பிழைக்க நீ மீண்டும் பத்து அவதாரங்களெடுத்து மக்களைக் காப்பாற்றினாயே. நீயல்லவோ வாழும் தெய்வம்.

ஓம் நமோ நாராயணாய!.

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.

கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்

ஞானக்கண்ணில் பார்த்தால் யாதும் சுற்றம் தான்

"ஹலோ என்ன இது, இன்னம் பாட்டை முணுமுணுக்கறத நிறுத்தலியா?என்னால தூங்கவே முடியலை. உங்களத் தான்"

"யாரடா அவன்? முட சைவனா. என்னை ஏன் இப்படி ஆட்டுகிறீர்கள்?"

"ஹ்ம்ம் யாரும் இங்க மூடனும் இல்லை சைவனும் இல்லை. தசாவதாரம் பார்த்துட்டு வந்து இப்படியா தூக்கத்துல புலம்பறது. எழுந்திருங்க. எழுந்திருங்க"

"நான் எங்கே இருக்கேன்? ஆழ்வார்க்கடியான் எங்கே?வைகுண்டம் போயிட்டானா"

"ஹ்ம்ம் நீங்க இப்படி பேசிண்டிருந்தா கீழ்ப்பாக்கம் போக வேண்டியது தான்.போதும் இந்த தசாவதாரப் பிராதபத்தை தூக்கத்திலும் புலம்பணுமா. பேசாம தூங்குங்க"

ஓ! நான் கண்டது கனவா. சரி சரி தூங்கு"

"ஆமாம், என் தூக்கத்தை கலச்சுட்டு இப்ப குரட்டை விடறதைப் பாரு"

"புலம்பாதே தூங்கு. நாளைக்கு மீண்டும் இன்னொரு தடவை பார்க்கணும்"

இன்னொரு தடவையா....


June 17, 2008

மனைவி ஒரு Microsoft

'மனைவி' யை மையமாகக்கொண்டு தமிழிலே நிறைய படம் வந்திருக்கின்றன. "மனைவி ரெடி", "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "திருமதி ஒரு வெகுமதி", "சம்சாரம் அது மின்சாரம்", "பொண்டாட்டி தேவை" இப்படியாக இன்னும் பல. நான் ஒரு படம் எடுத்தால் இப்படித்தான் படத்துக்கு பெயர் வைப்பேன். 'மனைவி ஒரு Microsoft'. கேளிக்கை வரிவிலக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் ஏன் மனைவியை Microsoft'ஓடு ஒப்பிடுகிறேன் என்பதறுகு சில trailer காட்சிகள் இதோ!!


காட்சி - 1

"எனக்கு கிரிக்கெட்னா உயிர். எந்த ஒரு டீம் விளையாடினாலும் தவறாம பார்ப்பேன்."

"அப்படியா?! எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். நானும் கிரிக்கெட் பார்ப்பேன்"

"Oh Great!. (மனதுக்குள்) அப்பாடா கல்யாணத்துக்கப்பறம் சானல் சண்டை வராது"

சில வருடங்களுக்கு பிறகு!!!

"இந்த எழவெடுத்த கிரிக்கெட் ஓயவே ஓயாதா? எப்பப் பாரு, எவனாவது லொட்டு லொட்டுனு தட்டிண்டிருக்கானுங்க."

"ஏண்டி பொண்ணு பார்க்க வரச்ச நானும் கிரிக்கெட் பார்ப்பேன்னு சொன்னியேடி. இப்ப இப்படி பேசறே?"

"அன்னிக்கு சொன்னேன். இப்ப சொல்லறேன் பிடிக்கலை. எனக்கு கோலங்கள் பார்க்கணும். அபிக்கு பேரக்குழந்தை பொறந்தாச்சா இல்லையான்னு பார்க்கணும்"

Microsoft Windows'உம் டெமோவில் ஒழுங்காக வேலை செய்யும். ஆனால், நாட்கள் பல கடந்த பின்னர், தன் புத்தியைக் காட்டத் தொடங்கி விடும்.

காட்சி - 2

"இப்போ என்ன நடந்ததுன்னு முகத்தை தூக்கி வச்சுண்டிருக்கே"
"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை"
"இல்லையே, உன் முகம் என்ன காரணத்துக்காகவோ வாடியிருக்கே"
"ஒண்ணும் இல்லை"
"இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிண்டு இருந்தே. 10 மார்க் கேள்விக்கு பதில் சொல்லற மாதிரி பேசிண்டு இருந்துட்டு இப்போ எதுக்கு மணிரத்னம் படம் வசனம் மாதிரி பேசறே?"
"ஒண்ணும் இல்லைன்ன. ஒண்ணும் இல்லை. எனக்கு ஒண்ணும் பேசப்பிடிக்கலை"
இதற்குப்பிறகு, என்ன கேட்டாலும் மௌனம் தான் பதில். No response.

நீங்கள் விண்டோஸ் உபயோகிப்பவறாயின் இது ஒரு பழகிப்போன behavior. எல்லாம் ஒழுங்கா work பண்ணிக்கொண்டிருக்கும் போது, திடீர்னு எந்த response'um இல்லாமல் அப்படியே எல்லாம் ஸ்தம்பித்து
விடும்.

Solution: Wait Indefinitely for auto recover mode to take over. Remember there is no reboot here. If you can't want, use the "ctrl+alt+del" key combination to bring things back to normalcy. This key combination might change from model to model :)

காட்சி - 3

"நீ ஊர்ல இல்லையேன்னு, நானே சமைக்கலாம்னு முடிவு பண்ணினேன் தெரியுமா"

"இப்போ என்னத்துக்கு தானே சமைச்சு சாப்பிடணும். ஹோட்டல்ல சாப்பிட்டா உள்ளே போகாதா? நான் வரும் வரைக்கும் சமையல் கட்டுக்குள் போக வேண்டாம்"

எந்த ஒரு மனிவிக்கும், சமையலறை என்பது தன்னுடைய கோட்டை மாதிரி. தன்னைத்தவிர வேறு யாரும் அங்கு ஊடுருவுவதை விரும்ப மாட்டாள்.

Microsoft doesn't prefer other software vendors to support their products.

"இல்லை. இன்னிக்கு நானே(!) சமைத்து சாப்பிடப் போறேன்"

"என்னத்தயேன் பண்ணித் தொலைங்க"

இவ்வளவு வீராப்பா வசனமெல்லாம் பேசிட்டு சமையலறைக்குள் வந்தால், அரிசி பருப்பு உப்பு காரப்பொடி சாம்பார் பொடி இதெல்லாம் எதுவுமே எங்கெங்கே இருக்கென்றே தெரியாது. அட அடுப்பு பத்த வைக்கிற லைட்டர் கூட எங்கே இருக்குன்னு தெரியாது. காய்கறிகளை நறுக்க அறுமாமணை எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும். அட தேங்காய் சட்னி செய்யலாம் என்று புறப்பாட்டல் தேங்காய் உடைக்கும் சுத்தியல் கூட கைக்கு எட்டும் இடத்தில் இருக்காது.

Microsoft keeps everything so secretive. They don't share their code and designs. Everything is a closed world in Microsoft.

காட்சி - 4

"எடி என் ஃப்ரெண்டு மனைவி ஊருக்குப் போயிருக்காளாம். அவனுக்கு இன்னிக்கு நம்ம வீட்டுல தான் டின்னர். எல்லருக்கும் சேர்த்து சமைத்து விடு"

"ஏன் உங்க அந்த பாழாப்போற ஃப்ரெண்டுக்கு ஊர் உலகத்துல இருக்கற எந்த ஹோட்டலும் கண்ணுல தென்படலியா. நான் என்ன இங்கே சத்திரமா வச்சு நடத்துறேன். வற்ரவன் போறவனுக்கெல்லாம் பொங்கிப்போட"

Microsoft develops applications only for Windows. MS applications don't run on any other Operating systems. No compliance with other Operating systems.

காட்சி - 5

"இப்போ என்ன தான் சொல்ல வற்ரீங்க. உங்களுக்குத் தான் எல்லாம் தெரியும். எனக்கு ஒண்ணுமே தெரியாது அவ்வளவுதானே."

"நான் அப்படிச் சொல்லவில்லைடி. உன்கிட்டயும் நிறைய குறைகள் இருக்கு. திருத்திக்கோன்னு சொல்லறேன்."

"போதும் போதும். என்னைப்பத்தி இவ்வளவு சொன்னப்பறம் நான் எதுக்கு இங்கே இருக்கணும். நான் அப்பா வீட்டுக்கு போகிறேன்"

"ஐயையோ கண்ணு. இப்படி கோவிச்சுக்காதேம்மா. நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை. எனக்கு அப்பறம் வாழவே பிடிக்காது. நான் சொன்னதெல்லாம் தப்பு. எனக்குத் தான் உன்னைப் புரிஞ்சுக்கத் தெரியலை"

"அப்படி வாங்க வழிக்கு"

No matter, how many people are disgusted with Windows, how many developers hate Microsoft, how many bugs exist with Microsoft products, how many times windows hangs, how many times your hard disk gets corrupted, how many times invaluable data gets lost, how many times your computer is infected with viruses, MICROSOFT IS IRREPLACEABLE. There isn't just no life without Microsoft. So is without a wife.

இப்போ சொல்லுங்க. மனைவி ஒரு Microsoft'ஆ இல்லையா??

June 11, 2008

பொட்டி போணியாகுமா??


நாளைக்கு தசாவதாரம் ரிலீஸ். எனக்கு இப்பவே மனசு படபட'ன்னு அடிக்க ஆரம்பிச்சாச்சு. ஒரு வழியா முட்டி மோதி உருண்டு புரண்டு ஒரு வழியா ஜூன் 12 ரிலீஸ்'னு சொல்லிட்டாங்க. இன்னும் ஒரு கேஸு நிலுவையில் உள்ளதா அரசல் புரசலா பேசிக்கிறாங்க.
பரீட்சை எழுதிட்டு ரிசல்டுக்காகக் காத்துக்கிடக்கும் மாணவன் மாதிரி படம் எப்படி வரப்போகுது என்ற ஆவல் என்னை ரொம்பவே வாட்டுது.

"ஏண்டா வெண்ணை, கமலே படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குமோன்னு கவலைப்படலை. நீ ஏண்டா இப்படி அலுத்துக்கறேன்னு" எல்லாரும் கேக்கறது காதுல விழுது. ஆனா இந்த பாழாப்போன பெங்களூர்'ல எந்த தியேட்டர்'ல இதை திரையிடப்போராங்கன்னு இன்னும் தெரியவேஇல்லை. INOX'னு சொல்லறாங்க. ஆனால், INOX வலைதளத்துல இதைப்பற்றி ஒண்ணுமே போடலை. PVR'ல "பூத்நாதுக்கு" கொடுத்திருக்கிற விளம்பரம் கூட தசாவதரத்துக்கு கொடுக்கலை. ஹ்ம்ம் படம் பார்க்க ஹோசூர் தான் போகணும் போலிருக்கு.
நாளைக்கு விடிஞ்சாத் தெரிஞ்சுடும், படம் பொட்டியை விட்டு வெளிய வந்துச்சா இல்லையான்னு.

June 10, 2008

நடை பழகிய நாட்கள்

எவ்வளவு தான் பதிவு எழுதியிருந்தாலும் யாராச்சும் கவிதை எழுதும் போது பயங்கர inferiority complex வந்துடுது. "என்ன எழவுடா இது. நமக்கு மட்டும் இந்த கவிதை வந்து தொலைய மாட்டேங்குதே"என்ற ஆதங்கம். இருந்தாலும் மனச தேத்திகினு ஒரு கவிதை எழுதிப்புட்டேன். கவிஞர்கள் பலர் உள்ள வலைஞர்களே, இது மண்டபத்தில் யாரோ எழுதி நான் கட்டிங் ஒட்டிங் செஞ்சது இல்லை. நானே நானே எழுதினது. நக்கீரன் மாதிரி கேள்வியெல்லாம் கேக்காம படிச்சுட்டு, முடிஞ்சா ரெண்டு வார்த்தை நல்லதா எழுதினா புண்ணியமாப் போகும்.
நன்றி,
மீண்டும் கவியுரைப்பேன்

பசுமை மிக்க கல்லூரி நாட்கள் முடிந்து
பயணப்பட்டேன் திரவியம் தேடி
வந்திறங்கினேன் சென்னையில்
ஏதாவதொரு வேலையை நாடி

அப்போது கேம்பஸ் இன்டர்வியூஎன்
கல்லூரியில் வந்திருக்கவில்லை
வந்திருந்த ஓரிரு கம்பெனிகளும்
என்னைக் கண்டு கொள்ளவில்லை

ஏறி இறங்கினேன் சில பல
கம்பெனிகளின் படிகளை
அப்பப்போ நொந்து கொண்டேன்
என்னோடு விளையாடும் விதிகளை

சில சமயம் கையிருப்பில்
குறைந்து விடும் பணம்
அப்போதெல்லாம் "நடையைக்கட்டுடா"
என்று சொல்லும் என் மனம்

கொடுத்தான் ஒரு புண்ணியவான்,
எனக்கென்றொரு வேலை
முதல் சம்பளத்தில் வாங்க
நினைத்தேன் அம்மாவிற்கோர் சேலை

வேலையென்னவோ டை கட்டிக்கொண்டு
நகரெங்கும் சுற்றும் விறபனையாளர்
தாம்பரம் முதல் தண்டையார்பேட்டை வரை
கிடைக்கவில்லை ஒரு வாடிக்கையாளர்

காசில்லா சில தினங்களின் முன் பாதி
கழியும் வள்ளுவர் கோட்டத்திலே
உண்ணாத மதிய மயக்கங்கள் அரங்கேறும்
தி.நகர் பனகல் தோட்டத்திலே

காலையில் தாம்பரம், மதியம் அடையார்
மாலை பாரிமுனை, இரவில் கொரட்டூர்
மறுநாள் பரங்கிமலை, பிறகு எழும்பூர்
மீண்டும் மயிலை, முடிந்தால் பெரம்பூர்

அப்பா கைப்பிடித்து நடக்கப்பழகிய
நாட்கள் நினைவிருக்கவில்லை
வாலிப வயது வந்த பிறகு
நடந்து பார்த்ததில்லை

வழித்தடங்கள் பல பழகியும் நடந்தே
கடந்தேன் சென்னை வீதிகளை
வாழ்வில் மீண்டுமொருமுறை
செலுத்தலானேன் என் கால்களை

கிலட்சையும் ஆக்சிலரேடரையும்
அழுத்திய கால்கள்
இன்று, மீண்டும்
நடக்கப்பழகும் நாட்கள்

சாலையிலே நடப்பவர்களைக்கண்டு
ஏங்குகின்றன என் இரு கண்கள்,
வராதா மீண்டும் அந்த
நடை பழகிய நாட்கள்

CBSE பாடப்புத்தகத்தில் ரஜினி

சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில் (தமிழ் நாடு ஸ்டேட் போர்ட் இல்லை) ரஜினி பற்றி பாடமே வந்தாச்சு. ரஜினி வாழ்க்கை வரலற்றிலிருந்து கற்றுக்கொள்ளூம் விஷயமாக சில பாயிண்டுகளை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.




June 06, 2008

எந்த வேளையில் முழித்தேனோ?

இன்று காலையிலிருந்தே என் நேரமே சரியில்லை என்று நினைக்கிறேன். லன்ச் கட்டிக்கொடுக்க மனைவி லேட் ஆக்கியதால் கம்பெனி பஸ்ஸை விட்டாச்சு. என் மைத்துனர் ஆஃபீஸும் பக்கத்திலிருப்பதால் அவரோடு தொற்றிக்கொண்டு வந்து விடலாம் என்றெண்ணி அவரோடு கிளம்பி வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் கூட கடந்திருக்கவில்லை, அநியாயமாக எல்லா வண்டிகளும் நகராமல் இருந்த இடத்திலேயெ நிற்கின்றன. என்ன ஏது ஒன்றும் புரியவில்லை.
பெங்களூர், டிரஃபிக் ஜாமுக்கு பேர் போனது தான். இருந்தாலும் அஃபீஸ் போகும் நேரத்திலா? கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் முன்னால் சென்றோம். இரு சக்கர வாகனமாக இருந்ததால் இண்டு இடுகிலெல்லாம் நுழைந்து நுழைந்து போனோம். இதே நான் காரோட்டும் போது யாராவது போனால், அந்நியன் ஸ்டைலில் இறங்கிப்போய் நாலு சாத்து சாத்தணும் போல் இருக்கும். என் போறாத வேளை, இப்படி போனால் தான் இன்று காரியம் நடக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு வாகனமுமே போக முடியவில்லை. சரி வண்டியைத் திருப்புவோம் என்று ரோட்டிற்கு நடுவிலுள்ள மீடியன் மேல் பைக்கை தூக்கி, ஒரு ஒத்தையடிப்பாதை வழியாக செலுத்தலானோம். நல்ல வேளை, பெங்களூரில் நிறைய பேருக்கு இந்த வழி தெரிந்திருக்கவில்லை. அதனால் நாங்கள் வந்த பாதையில் அவ்வளவாக வாகனங்கள் இல்லை. இந்தப் பாதையில் வந்தால் பெங்களூரிலுள்ள வயல் வெளியெல்லாம் பார்க்கலாம். இன்று அதையெல்லாம் பார்த்து ரசிக்கும் ஆர்வம் இல்லை. உடைந்து போன சாலையில் முட்டி மோதி கியர்கள் பல மாற்றி ஒரு வழியாக ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன். 30 நிமிடம் கடக்க வேண்டிய பாதையை 1.30 மணி நேரத்தில் கடந்து வந்தோம்.
ஒரே தலைவலி. வேலை செய்யும் எண்ணமே இல்லை. ஒரு காஃபி குடித்த பிறகு தான் தெம்பு வந்தது. எனக்கு பின்னால் தான் என் மனேஜர் உட்கார்ந்திருக்கிறார். இன்னும் ப்ளொகிக்கொண்டிருந்தால் புடனியைச் சேர்த்து ஒன்று விட்டாலும் விடுவார். கொஞ்சம் வேலையும் பார்ப்போம்.
தினமும் என் மனைவி தான் எழுப்புவாள். அவள் முகத்தில் தான் தினம் விழிப்பு என்றாகிவிட்ட பிறகு, யார் மூஞ்சியில் முழித்தேன் என்று தலைப்பு போட முடியுமா. அதனால் தான் "எந்த வேளையில் முழித்தேனோ" என்று தலைப்பு :)
நான் இப்படியெல்லாம் எழுதறதை பார்த்துட்டு நான் மனைவிக்கு பயந்தவன் என்று மட்டும் எண்ணிவிட வேண்டாம். ஐயா வீட்டுல பயங்கர ஸ்ட்ரிக்ட் :)

June 05, 2008

வாழ்க்கைப் பாடம் - 1

ஆசிரியர்கள் பலர் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பாடம் நடத்தியதோடு தன் கடமை முடிந்ததென போயிருக்கிறார்கள். ஆனால் என் கூடவே இருந்து எனக்கு நிதமும் பாடம் நடத்தும் ஆசான் ஒருவர் இருக்கிறார். அவர் தான் 'வாழ்க்கை'. வாழ்க்கை எனக்கு நிறைய பாடங்கள் புகட்டியிருக்கிறது. நான் நினைவறிந்து நான் கற்ற முதல் பாடம் 'உணவைப் பழிக்காதே'
சிறு வயது முதல் சாப்பாட்டில் சில உணவு வகைகள் பிடிக்கும். பல பிடிக்காது. சாம்பார் வத்தக்குழம்பு முட்டைக்கோஸ் உருளைக்கிழங்கு இப்படியெல்லாம் சமைத்துப் போட்டால் மறு பேச்சு பேசாமல் சாப்பிட்டுப் போய் விடுவேன். ஆனால் அம்மா எப்போதும் எனக்குப் பிடித்ததையே சமைத்துப் போடமாட்டாள். பல தடவை எனக்குப் பிடிக்காதது தான் வீட்டில் மெனுவாக இருக்கும். பாகற்காய் பிட்லா, கத்தறிக்காய் பிட்லா கற்ணக்கிழங்கு மசியல், இப்படி ஏதாவது எனக்கு சுத்தமா பிடிக்காததை சமைத்து விடுவாள். சாப்பிடப் பிடிக்காம அடித்துக் குதிப்பேன். "இந்த *(&@%*(&@*(#$%*(@& சமையலை யார் கண்டுபிடித்தர்கள்" என்று திட்டுவேன்.
ஆனாலும் அம்ம்விடம் என் பாச்சா பலிக்காது. ஒக்காத்தி வச்சு வாய்க்குள் திணித்து விடுவாள். எல்லாத்தியும் முழுங்கினப்பறம், "என்ன
இப்போ நன்னா இருக்கா இல்லையா?" என்று கேட்டால், "நன்னாத்தான் இருக்கு. ஆனா எனக்குப் பிடிக்கலை" என்பேன். (எங்களுக்கெல்லாம் குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டாதுல்லா). "பாரு பாரு இந்த சமையல் சாப்பிட என் காலில வந்து ஒரு நாள் வந்து விழுவே" என்பாள்.
படிப்பெல்லாம் முடிந்த பிறகு கொல்கத்தாவில் வேலை கிடைத்தது. ஆஹா என்ன ஊர்! சைவ சாப்பாடு கிடைக்கும் ஹோட்டலே கிடையாது. அப்படியே ஒன்றிரண்டிருந்தாலும் 10 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். அதுவும் சில நாட்களில் மூடி விடுவார்கள். அந்த ஊரில் பொழுது போகவில்லையென்றால் பந்த் நடத்திவிடுவார்கள். நிஜமாகவே சாப்பாட்டிற்கு லாட்டரி அடித்திருக்கிறேன். "எங்காவது அம்மா சமைத்துப் போட்ட மாதிரி டைக்காதா? அட இந்த பாழாப்போன பாகற்காய்ப்பிட்லா கிடைத்தால் கூடப் பரவயில்லை" என்று புலம்பர லெவெலுக்கு வந்துட்டேன்.
ஆறு மாதம் கழித்து லீவு எடுத்துக்க்கொண்டு வந்தவுடன் அம்மாவிடம், "நீ என்ன வேணா சமைத்து போடு. உன் சமையலைச் சாப்பிட வேண்டும்" என்று அழாத குறையாக சொன்னேன்.
கொல்கத்தாவில் ஒரு வருடம் கை நிறைய சம்பாதித்தாலும் வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்காமச்செய்து வாழ்க்கை எனக்குப் புகட்டிய பாடம் "உனவைப் பழிக்காதே". ஆஹா ஆத்திச்சூடி range'க்கு இருக்கே.
அங்கு நான் பெற்ற அனுபவம் தான் பிற்காலத்தில் என் மனைவி எது எப்படி சமைத்துப்போட்டாலும் மறு பேச்சு பேசாமல் சாப்பிட்டுப் பழக கற்றுக்கொடுத்தது.
பி.கு. என் மனைவி நன்றாகவே சமைப்பாள்.

June 04, 2008

கணவரைக் கவர்வது எப்படி??

வலையில் மேய்ந்துகொண்டிருந்த போது, "பெண்களை அதுவும், மனைவியைக் கவர்வது எப்படி" என்று ஒரு வலைப்பதிவு. ரொம்ப நன்றாகவே இருக்கிறது. மெனக்கெட்டு ஆராய்ச்சியெல்லாம் செய்து, ஸ்வாரஸ்யமாகவே எழுதியிருக்கிறார். அதிலும் உண்மையை எழுதிருக்கிறார். பாவம்பா பசங்க. இந்த பெண்களைக் கரெக்ட் செய்ய(தப்பு தப்பு கவர்ந்திட) என்னவெல்லாம் மெனக்கிட வேண்டியிருக்கு. யாராவது ஆண்களைக்கவர்ந்திட பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று யாராவது எழுதிருக்காறா என்று தேடினால், ஒன்று கூட கிடைக்கவில்லை. ஆண் பெண் புணற்சியெல்லாம் one way traffic தானா? பசங்க தான் பொண்ணுங்க மனசு நோகாம நடந்துக்கணுமா? பொண்ணுங்க பசங்ககிட்டேர்ந்து இவ்வளவு எதிர்பார்க்கும் போது, பசங்களை (அதாவது புருஷன்மார்களை) கவர்ந்திட பெண்கள் என்னவெல்லாம் செய்யணும்னு "நான்" டிப்ஸ் கொடுக்கலாம்னு இறங்கியிருக்கேன்.

டிப்ஸ் 1:
பொதுவாகவே ஆண்கள் திருமணத்திற்குமுன் அம்மாகோண்டுவாகவே இருப்பார்கள். கல்யாணத்திற்குப்பிறகு, அவர்கள் முதலில் எதிர்பார்ப்பது தன் மனைவியும், தனது தாயை அம்மாவைப் போல் பார்க்க வேண்டும் என்பது தான். அதனால் பெண்களே, உங்கள் மாமியாரை அம்மா என்றே அழையுங்கள். (ஒண்ணும் கொறஞ்சு போயிட மாட்டீங்க). அத்தை Aunty என்று அழைப்பதை தவிற்கவும்.
எப்போடா மமியார் வூட்டுலேர்ந்து தனிக்குடித்தனம் போகலாம்னு தேதி குறிக்கப்படாது.

டிப்ஸ் 2:
பசங்களுக்கு அம்மா சமையல் என்றால் உயிர். எங்கே போனாலும் அம்மா சமையல் மாதிரி கிடைக்காதா என்றே ஏங்குபவர்கள். சில பசங்க கொஞ்சம் சாப்பாட்டு ராமன்களாவே இருப்பானுங்க. தன் மனைவியின் சமையலிலும் அம்மாவின் கைப்பக்குவத்தையே எதிர்பார்ப்பார்கள். அதனால் பசங்களுக்கு அவங்க அம்மா மாதிரியே சமைக்கக் கற்றுக்கணும். கணவன் தனது அம்மா சமைப்பது போல் வடை பாயாசம் சாம்பார் ரசம் என விருப்பப்பட்டால், "நான் பிரட்டும் கார்ன் ஃப்ளேக்ஸும் தான் கொடுப்பேன்" என்று சொல்லலாகாது.

டிப்ஸ் - 3:
கிட்டத்தட்ட எல்லா ஆண்களுமே கிரிக்கெட் பார்ப்பார்கள். எவன் மட்டையைத்தூக்கிக்கொண்டு விளையாடினாலும் தூக்கம் விழித்துப்பார்ப்பார்கள். இன்னும் சிலர் ஸ்போர்ட்ஸ் சானல் மட்டுமே பார்ப்பார்கள். மனைவிகளாகப்பட்டவர்கள் முடிந்த வரையில் கணவருடன் மல்லுக்கு நிற்காமல், அவருடன் சேர்ந்து விளையாட்டைக்கண்டு களிப்பது சாலச்சிறந்தது. அதுவே தர்மம். கிரிக்கெட் மட்டுமல்லாமல் டென்னிஸ், ஃபார்முலா - 1, ஃபுட் பால் கோல்ஃப் எதுவானாலும் கணவனுடன் சேர்ந்து பார்த்து ஆரவாரம் செய்தால் கணவன்மார்கள் அகமகிழ்ந்து போவார்கள். அதை விடுத்து நான் அரசியும் கோலங்களும் அரசியும் தான் பார்ப்பேன். கிரிக்கெட்டெல்லாம் பார்க்கப்படாது என்று தர்க்கம் செய்யலாகாது.
செய்வார்களா நம்மூர் மனைவிமார்கள்?

டிப்ஸ் - 4
இது கொஞ்சம் கஷ்டமானது தான். இருந்தாலும் இதை மட்டும் மனைவிகள் செய்துட்டாங்களோ, ஆண்கள் மனைவி கேட்டதெல்லாம் செய்வார்கள். சனி - ஞாயிறன்று நிறைய பசங்க மட்டையைத் தூக்கிக்கிட்டு விளையாட கிளம்பிடுவாங்க. அன்னிக்குப்பார்த்து, வீட்டு வேலை கொடுக்கிறது, கடைக்குப்போய் சாமான் வாங்கி வரச்சொல்வது, இதெல்லாம் கூடவே கூடாது. முடிந்த வரையில் கணவருடன் கிரவுண்டுக்குச் சென்று, அவர் விளையாடுவதை ரசித்து ஊக்குவிக்கலாம்.

இந்த நான்கு ரூல்ஸை மட்டும் மனைவிகள் கடைபிடித்தார்களோ......




கூட்டிப்புட்டாங்கய்யா கூட்டிப்புட்டாங்கய்யா

இவ்வளவு நாளா புலி புலி வருதுன்னு சொல்லிச்சொல்லி, கடையிசில, புலி வந்துடுச்சு. என்ன ஒண்ணும் புரியாம முழிக்கியேளா? அட பெட்ரோல் டீசல் விலைவாசியை ஏத்திப்புட்டாங்கள்லா. அதத்தான் சொல்லுதேன்.
உலகச்சந்தையில கச்சா எண்ணெய் விலை ஒசந்திருச்சாம். "இதுக்குமேல நம்மால தாக்கு பிடிக்க முடியாதுப்பா"ன்னு, நம்ம பிரதம மந்திரியே கைய விரிச்சுட்டாரு. அதனால வேற வழியே இல்லாம பெட்ரோல் டீசல் விலையை ஓசத்திப்புட்டாங்க.
இதுனால எல்லா பொருட்களோட விலையும் எகிறப்போகுது. ஏற்கனவே எங்க வூட்டாம்மா பீன்ஸுக்கு தடா போட்டிருச்சு. இன்னும் எதை எதையெல்லாம் தியாகம் செய்யணுமோ. சமையல் எரிவாயு விலையையும் விட்டு வைக்கலை. அதையும் 50 ரூபாய்க்கு ஒசத்திப்புட்டாங்க. நம்ம வூட்டம்மாவ இனிமேல் கறியடுப்புல தான் சமையல் செய்யச் சொல்லணும்.
தெரியாமத்தான் கேக்கேன், இந்த CNG CNG' னு சொல்லுதாங்கள்ளா (அதாம்லே இந்த இயற்கை எரிவாயு), அதுல தான் இனிமே பஸ்ஸு காரு லாரியெல்லாம் ஓட்டணும்முன்னு ஏதாச்சும் சட்டம்-கிட்டம் கொண்டாரமாட்டாங்களா? "நமக்கு தெரிஞ்ச ஒரே இயற்கை எரிவாயு நல்ல துன்னுட்டு விடறது தானே, இவன் என்னத்த சொல்லுதான்"னு விவகாரமா பாக்குறீயேளா? மீதேன்'கிறது தான் இயற்கை எரிவாயு. இந்த மீதேன் எல்லா சுரங்கத்துலயும் ஃப்ரீயாவே கிடைக்குது. இதை ஒண்ணும் செய்யாம, அப்படியே எரிக்கிறாங்க. இத்தப் புடிச்சு வெச்சு, காரு பஸ்ஸு ஒட்டறதுக்கு அழகா பயன்படுத்தலாம்.
இந்த லக்ஷணத்துல நம்ம முதல்வர் பொறந்த நாள் விழா கொண்டாடுறாரு. நாட்டுல இருக்கற மக்கள் எந்த கதிக்கு ஆளானா என்ன. இவர் பாட்டுக்கு சினிமா காரனுங்க அடிக்கிற கூத்துக்கும், 'கவியரங்கம்'ன்ற பேர்ல நடக்குற காக்கா பிடி நிகழ்ச்சிக்குப் போகவே இவருக்கு நேரமிருக்க மாட்டிங்கிது.
இந்த லக்ஷணத்துல தோழமை கட்சிக்காரப் பயகளும் எதிர்க்கட்சிக்காரப்பயகளும் பந்த் நடத்த போறானுவளாம். நாடு உருப்புடும். ஏண்டா வெண்ணெய்ங்களா, கவர்ன்மென்ட் செய்றது பிடிக்கலைன்னா, நீங்க கொடுக்கிற ஆதரவை வாபஸ் வாங்குங்களேண்டா. அதுக்கு ஒரு பயலுக்கும் துப்பு இல்லை. அத்த விட்டுப்புட்டு மக்களை பாதிக்கிற மாதிரி ஏண்டா பந்த் நடத்துறீங்க. ஒங்கள மாதிரி ஆளுங்க இருக்கறவரைக்கும் நாடு உருப்படவே உருப்படாது.
இல்லை, இனிமேல் எல்லா பஸ்ஸும் லாரியும் CNG'ல தான் ஓடணும்'னு சட்டம் கொண்டாஙளேன். அதுக்கும் ஒரு பயலுக்கும் திறமை இல்லை. இந்த கூத்தெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ? இதுல இந்தியாதான் அடுத்த சூபர் பவர்ன்னு சொல்லிக்கிறாங்க. அஜீத், "நான் தான் அடுத்த சூபர் ஸ்டார்"னு சொன்ன மாதிரி இருக்குது.

June 03, 2008

மீண்டும் எங்கள் வீட்டில் அழுகை ஆரம்பம்

ஐ.பி.எல் மூலம் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ இல்லையோ, எனக்கு நிறைய லாபம். நிதமும் ஒரு த்ரில்லர் படம் பார்க்கும் எஃபெக்டோடு கிரிக்கெட் பார்க்க முடிந்தது. ஒருவழியாக அபியும் கலையரசியின் அழுகையும் இவ்வளவு நாள் இல்லாமலிருந்தது. ஏதோ திருவிழா முடிந்த ஊர் போல் கிரிக்கெட் இல்லாமலிருப்பது மனதை உறுத்தித் தள்ளுகிறது. இதாவது பரவாயில்லை, வீட்டில் மறுபடியும் கோலங்களும் அரசியும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.
மெகா சீரியல் தயாரிப்பாவர்கள், ஐ.பி.எல்லால் ரொம்பவே நொந்து போயிருக்கிறார்கள். அவர்களது டி.அர்.பி ரேட்டிங் எல்லாம் ரொம்பவே குறைந்து போயிருந்தது. இப்போது ஐ.பி.எல் முடிந்ததும், "எங்க சீரியலை இவ்வளவு நாள் பார்க்காம இருந்தீங்கள்லடா! இந்தா பிடி, அடுத்த சில எபிசோடுகளுக்கு அழுது குளியுங்கடா" என்று சாபம் விட்டுவிட்டார்கள்.
இனி, வீட்டுக்குள் நுழையும் போதே என்றுமே நிறைவடையாத கோலங்களையும், கதையே இல்லாமல் ஜௌ மிட்டாயாக நீளும் அரசியையும், பார்த்தாக வேண்டும்.
சீக்கிரமா அடுத்த ஐ.பி.எல் எபிசோடைக் கொண்டாங்கப்பா!!!

June 02, 2008

இப்படியும் பணம் பண்ணலாம்

நண்பனின் கல்யாணத்திற்காகச் சென்னைக்குக் காரிலே செல்லலாம் என்று முடிவு செய்து, சனிக்கிழமை அதிகாலையிலேயே பெங்களுரிலிருந்து புறப்பட்டோம். போகும் வழியில் வேலூரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் தங்கக்கோயிலையும் தரிசித்துவிட்டுப் போகலாம் என்றும் முடிவானது. உறவினர் ஒருவர் கோயிலைப்பற்றி ஆஹா ஓஹோவென்று சொன்னது கோயிலுக்குப் போகும் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தியது. பெங்களுரிலிருந்து மூன்று மணி நேரத்தில் வேலூர் வந்தாயிற்று. வேலூர் ஊருக்குள் சென்று இந்தக்கோயிலை வந்தடைய இன்னொரு மணி நேரமாகிவிட்டது.
சரியாக 11 மணிக்கு காரை பார்க் செய்து விட்டு வரும் பொழுது தான் கவனித்தேன், "தரிசன நேரம் 4" என்று போடப்பட்டிருந்தது. சில கௌன்டர்களும் அருகில் இருந்தன. விசாரித்த போது, ஃரீ தரிசனம் பெற 4 மணி நேரம் காக்க வேண்டியிருக்கும் என்றார்கள். "அப்போ சீக்கிரம் தரிசனம் செய்யணும்னா என்ன செய்யணும் என்று கேட்டதற்கு", ஆளுக்கு 100 ரூபாய் டிக்கட் வாங்கினால் ஸ்பெஷல் தரிசனம் கிடைக்கும். அதற்கு காக்க நேரிடாது என்று பதில் வந்தது. எனக்கு இந்த மாதிரி காசு கொடுத்து இறவனைக் காணும் பழக்கம் ஏனோ பிடிக்காது. இருந்தாலும் 4 மணி நேரம் பொறுத்திருக்க யாருக்கும் பொறுமை இல்லை. கேட்ட தொகையைக்கட்டி விட்டு உள்ளே செல்லலானோம்.
இந்தக் கோயிலை, நாராயணி பீடத்தைச் சேர்ந்தவர்கள் கட்டியிருக்கிறார்கள். 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரீஈஈய தோட்டத்தை அமைத்து, அதற்கு நடுவில் ஓர் குளத்தையும் அமைத்து, அதற்கு நடுவில் பொன் தகடுகளால் நாராயணி(லக்ஷ்மிக்கு இன்னொரு பெயர்)சன்னதி அமத்திருக்கிறார்கள். உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்தது, எல்லோருமே 100 டிக்கட் வங்கித்தான் உள்ளே வந்திருக்கிறார்கள் என்று. உள்ளே வரும் எல்லோரையும் ஒரு கிலோமீட்டர் தூரமாவது வளைந்து வளைந்து போகும் படி செய்திருக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை. ஃரீ என்ட்ரி வழியாக வரும் பக்தர்களுக்கான பாதை, டிக்கட் கொடுத்து வரும் பக்தர்களுக்கான பாதையைவிட நன்றாகவே இருக்கிறது. கோயில் முழுவதும் பொன் பூசப்பட்ட தகடுகள்ளல் செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள். சன்னதிக்குச் சென்றதும். பிரஹாரத்தை முதலில் சுற்றிவிட்டுத்தான் தேவியை தரிசிக்க முடியும். ஆனால் பிரதக்ஷிணம் செய்யும் வழியை மாற்றி வைத்திருக்கிறார்கள். கோயில் ஆகம விதிப்படி இது தவறானது. டிக்கட் வாங்கியவர்களுக்கு மட்டும் பிரசாதம் உண்டு. மற்றவர்கள் விலை கொடுத்து வாங்க வேண்டும்.
கோயிலுக்கு வரும் அத்தனை பேரும், கோயிலில் ஜொலிக்கும் தங்கத்தைப் பார்த்தவண்ணம் தான் இருக்கிறார்களே தவிர யாரும் பக்தி சிரத்தையோடு சாமி கும்பிட்டார்களா என்பது சந்தேகமே. (என்னையும் சேர்த்துத்தான்). எனக்கென்னவோ பணம் பண்ணுவதற்குத்தான் இப்படி கோயிலைக் கட்டியிருக்கிறர்களோ என்று தோன்றுகிறது. இம்மாதிரியான ஹை-டெக் கோயில்களைவிட இறை வழிபாட்டிற்காகவே கறுங்கற்களாலான தொன்மையான கோயில்களில் மனமொருமித்து, இறவனை தியானிக்க முடிகிறது என்பது எனது தாழ்மையான கருத்து.
பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்துவோம் என்று பாரதி சொன்னார். பணம் செய்வதற்காகப் பள்ளிகள் திறக்கப்படும் போது, கோயில்களை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன் என்று நினைத்து விட்டார்கள் போலும்!!