Pages

March 26, 2008

வெயிலோடு உறவாடி

ஏப்ரல் மாதம் என்றாலே இரண்டு ஸ்வாரஸ்யமான விஷயங்கள். ஒன்று முட்டாள்கள் தினம், இன்னொன்று ஸ்கூலில் விடுமுறை விட்டு விடுவார்கள். பள்ளியின் இறுதி நாளன்றே ஒரு தினுசாகத்தான் வீட்டுக்குள் வருவேன். வாசலிலேயே ஷூ சாக்ஸஸை அவிழ்த்து வீசி எரிந்து விட்டு, விளையாட ஓடி விடுவேன். பள்ளி இறுதியாண்டு பரீட்சையில் ஒரு சௌகர்யம் என்னவென்றால், எந்தெந்த பாடங்களில் எவ்வளவு மார்க் வாங்கினேன் என்று தெரியாது. யார் முதல் ரேங்க், என் ரேங்க் என்ன, எதுவும் தெரியாது. அதனால் அம்மாவிடம், வினாத்தாளிலுள்ளவற்றுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்காது. (அப்படியும் சில சமயம் அம்மா, ஏதாவது CID வேலை பார்த்து என் மர்க்கைக்கண்டு பிடித்து, என்னைப் போட்டு வதைப்பதுண்டு)

எங்கள் ஊர் வெயிலுக்கு பெயர் போன ஊர். வருஷத்திலுள்ள அனைத்து மாதங்களிலும் எங்கள் ஊர் மீது ஆதவனின் பார்வை உக்கிரமாகவே இருக்கும். கோடை விடுமுறையில் பெரும்பாலும் என் தாத்தா ஊருக்குச் சென்றுவிடுவோம். அங்கு சென்று விட்டால், என்னை கையிலே பிடிக்க முடியாது. அம்மாவின் ஜம்பமும் அங்கு பலிக்காது. தாத்தா முன் என்னைத் திட்டினால் அவருக்குக் கோபம் வந்து விடும்.

எப்போதும் நண்பர்கள் படை சூழ பேட்டும் பாலுமாகத் தான் திரிவோம்.
சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்கு வருவேன். காலையிலே குளிப்பதற்கு ஆற்றிற்குச் சென்றால், திரும்பி வருவதற்கு 11 மணியாகிவிடும். வரும்போதே குளித்தது போக, களைத்துத்தான் திரும்பி வருவோம். அதிலும், எங்கள் நண்பர்கள் பட்டாளத்தில் எல்லோருமே சற்று கறுத்த நிறமுடையவர்கள். திரும்பி வந்த பத்தாவது நிமிடம், மீண்டும் விளையாட ஓடி விடுவேன். விளையாட்டென்றால், வீட்டில் அமர்ந்தபடி சீட்டோ, கேரம் போர்டோ அல்ல. எப்போதுமே கோடை காலங்களில் கிரிக்கெட் தான். அதுவும் பெரும் பாலும் ஏனைய தெருக்களின் டீம்களொடு மேட்ச். கொளுத்தும் மத்தியான நேர வெயிலில் தான் எங்கள் மேட்ச் ஆரம்பமாகும். தினமும் தெரு டீமோடு மேட்ச் இருக்கும்.
தாத்தாவிற்கு நான் வெயிலிலே விளையாடப் போவது பிடிக்காது. இருந்தாலும் திட்ட மாட்டார். "கோந்தே இந்த வெயில்ல விளையாடப்போகவேண்டாம். சாயங்காலமா போகலாம்" என்பார். பாட்டிக்கு என் மேல் இன்னும் வாஞ்சை அதிகம். "இந்த வெயில்ல வெளியில போனா கறுத்துப் போயிடுவே!!" என்பாள். அப்படியும் எல்லோர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு நான் வெளியிலே ஓடிவிடுவேன். அந்த நாட்களில் வெயில் ஒன்று இருக்கிறதா என்றே நான் நினைத்ததில்லை.

வெயிலிலே அலைந்து திரிந்து வரும் என்னை என் அம்மா கறி வண்டிச்சூலன் என்று அழைப்பாள்.
வெயில் எனக்கு ஒரு தோழன் போல், என் கூடவே இருந்திக்கிறான். இந்நாள் வரை, என்னையோ என் நண்பர்கள் பட்டாளத்தையோ ஒன்றுமே செய்ததில்லை. நாங்கள் எல்லோருமே வெயிலோடு கிட்டத்தட்ட உறவாடி வளர்ந்திருக்கிறோம்.
வெயில் என்ற ஒன்று கூடவே இருந்தும், அதைப் பற்றி சட்டை செய்யாமல் வளர்ந்த நான், திரவியம் தேடி பெண்களுர் வந்த பிறகு, முகிலினங்களின் போர்வையை நீக்கி, ஆதவன் சற்றே கண் சிமிட்டினால் கூட, அலுவலகத்தின் குளிர்சாதன அறையிலிருந்தவாறே, "அப்பப்பா, என்ன வெயில!! எப்படித்தான் மக்கள் இந்த வெயிலில் வெளியில் செல்கிறார்களோ??" என அங்கலாய்க்கிறேன்.

March 23, 2008

எனக்குள் ஒரு கலைஞன்

எங்கள் குடும்பம் பெரிய சங்கீதக் குடும்பம் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், அநேகமாக எல்லோருக்கும் சங்கீத ஆர்வம் மிகுதியாகவே இருந்தது. என் அத்தைகள், பாட்டி, பெரியப்பா, சித்தப்பா எல்லோரும் நன்றாகவே பாடுவார்கள். என் தங்கை கூட பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவள். இப்படி எல்லோரும் தனக்குள் ஒரு கலையை வளர்த்துக்கொள்ள, என்னக்கும் ஏதாவது ஒரு கலையை கற்றுத்தர வேண்டும் என்று என் அம்மா எண்ணினாள்.

கொண்டு போய் சேர்க்கப்பட்டேன் ஓர் அதிகாலை வேளையில், மிருதங்கம் பயில. "டேய், மிருந்தங்க கிளாஸ் போகிறாயா?" என்றெல்லாம் அம்மா கேட்கவில்லை. அம்மா எது செய்யச் சொன்னாலும் செய்யணும்; செய்வேன். குரு தக்ஷணையாக வெற்றிலை பாக்கு, பழம், நூற்றி ஓர் ரூபாய் எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றேன்; மிருதங்க கிளாஸ் இனிதே ஆரம்பமானது.
என் குருவிற்கு மிருதங்கம் தவிர கராதே குங்ஃபூ எல்லாம் தெரியும். நான் அறிந்து அவர் மிருதங்க பாடத்தை விட குங்ஃபூ பற்றித்தான் நிறைய பேசுவார். அடிக்கடி அதட்டி திட்டவும் செய்வார். அவரிடம் பேசவே பயமாக இருக்கும். அவர் முன்னிலையில் மிருதங்கத் தாளங்கள் தப்புத்தாளங்களாகவே இருக்கும். "என்னடா இது, மிளகாய் வத்தல் டின் தட்டற மாதிரி வாசிக்கிறியே" என்று அம்மா கேலி செய்வாள்.


ஓராண்டு அவரிடம் ஆரம்பப்பாடங்கள் கற்ற பிறகு, அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டேன், வேறொரு குருவிடம். வீட்டிற்கே வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார். வருவேன் என்று சொன்ன நாளன்று வரமாட்டார். எதிர்பாராமல் ஒரு நாள் வந்து நிற்பார். அதுவும் விளையாடச் சென்ற நேரமாக. என்னைவிட அவர் தான் நிறைய வாசிப்பார். நானும் வாத்தியார் வரும் நாளில் தான் மிருதங்கத்தையே தொடுவேன். அம்மா அடிக்கடி திட்டுவாள், "எழுநூறு ரூபாய் கொடுத்து வாங்கி ஒரு நாளாவது அதை தொடறியா" என்று வைவாள்.
" எங்கே எனக்கு பேட் பிடிக்கவே நேரத்தைக் காணும், இதிலெங்கே மிருதங்கம் வாசிக்க?". இதைச் சொன்னால் வகுந்துவிடுவாளென்று, "எங்க? எப்போ ப்ராக்டீஸ் செஞ்சாலும் மிளகாய் வத்தல் டின் தட்டற மாதிரி இருக்குன்னு சொன்னா, எப்படி வாசிக்க முடியும்" என்று என்னை டிஃபெண்ட் செய்துகொள்வேன்.

ஆனால், நான் வசிப்பதை என் தாத்தா வெகுவாகவே ரசிப்பார். நான் எது செய்தாலும், என்னை ஒன்றும் சொல்ல மாட்டார். கோடை விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்குச் சென்றாலும், மிருதங்க வாத்தியாரை, தன் ஊருக்கே வரவழைத்து எனக்கு கிளாஸ் எடுக்க வைப்பார். என் பக்கத்திலேயே அமர்ந்து கொள்வார். என்ன தான் மிளகாய் வத்தல் டின் மாதிரி தட்டினாலும், அவருக்கு நான் வாசிப்பதென்னவோ தேவ நாதமாக இருக்கும்.

என்னையும் ஒரு நாள் மேடையேற்றி விட்டார் (துணிச்சல் மிகுந்த!) என் குரு. பாடுவது என் தங்கையின் நடன குரு. நடனத்தில் மட்டுமின்றி பாட்டும் வெகு சிறப்பாகவே பாடுவார். என் தங்கையின் நடனம் நன்றாக இருக்கிறதென்றால் அதில் 50% பங்கு இவர் பாடுவதால்.

பயிற்சிகள் பல செய்து மேடையேறினேன் ஒரு மாலை வேளையில். தனது பேரன் மேடையேறி மிருதங்கம் வாசிக்கிறான் என்று புளகாங்கிதம் அடைந்தார் என் தாத்தா. எனது கச்சேரியைப் பார்க்க தாத்தா பாட்டி, அம்மா, அப்பா, அத்தை எல்லோரும் வந்திருந்தனர். வீடியோ(!!) வேறு எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.

கச்சேரியும் இனிதே ஆரம்பமானது. எனக்கென்னவோ சிறு வயதிலிருந்தே எதிலுமே ஒரு அவசரம். நிதானம் என்பது என் அகராதியில் கிடையாது. என் வாத்தியார் கூட அடிக்கடி சொல்வார், "விஜய், நன்னா வசிக்கற. ஆனா, தாளத்துக்கு முன்னாலே ஓடற. இப்படி ஓடாதே" என்பார். தாளத்திக்கேற்ப வாசிக்க பயிற்சிகள் பல செய்திருந்த போதிலும், பிறவிக்குணம் போகுமா?? "தாளம் வரும் பின்னே, எனது வாசிப்பு போகும் முன்னே", என்று வீரு கொண்டு நடை போட்டேன். அதே மேடையில் கடத்துடன், என் வாத்தியாரும் அமர்ந்திருந்தார். அவ்வப்போது கண்ணால் என்னைப் பார்த்து "ஓடாதே ஓடாதே" என்று சொல்லிக் கொண்டே இருந்தார். என் கைகள் என்னவோ கட்டுக்கடங்காத காளையைப்போல் தறி கெட்டு ஓடின.

ஒவ்வொரு பாட்டு முடிந்த பிறகும் அம்மா என்னைப்பார்த்து முறைப்பாள். நான் அவள் பக்கம் திரும்பவே மாட்டேன். கடைசி பாட்டில் தனியாவர்தனம்!! இங்கு தான் கச்சேரியின் உச்ச கட்டம். என்னைத் தவிர பக்க வாத்தியங்களாக, கடம், கஞ்சிரா, மோர்சிங் வாசிப்பவர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோரும் தேர்ந்த வல்லுனர்கள். ஆனால் மிருதங்கம் தான் பிரதான வாத்தியம் என்பதால், என்னைப் பின்பற்றித்தான் பிறர் வாசிக்க வேண்டும்.

தனியாவர்தனத்தை முடிக்கும் போது, எல்லோரும் சேர்ந்து, மிருதங்கத்தில் என்ன நடை வாசிக்கிறார்களோ, அதையே அவரவர் வாத்தியத்தில் வாசிப்பது வழக்கம். ஆனால் யாருக்கும் என் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாசிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் பாடுபவர், தாளம் போடுவதையே நிறுத்தி விட்டார். ஏதோ நான் முன்னாடி ஓடுவதும், மற்ற வாத்தியக்காரர்கள், என்னைப்பிடிக்க முயற்சி செய்வது போலும் இருந்தது. கச்சேரி முடிந்த பிறகு, என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் என் தாத்தா, "ரொம்ப நன்னா வாசிச்ச கோந்தே" என்றார்.

இதுவே நான் என் வாழ்க்கையில் வாசித்த முதலும் கடைசியுமான கச்சேரி. அதன் பின் எனக்குள் இருந்த கலைஞன் உறங்கி விட்டான். ஒவ்வொரு விஜய தசமி அன்றும் அவனை எழுப்பி, மிருதங்கத்தில் இரண்டு நடை வாசித்து விட்டு மூட்டை கட்டி வைத்து விடுவேன். "நீ இப்பவும் மிளகாய் வத்தல் டின் மாதிரி தான் தட்டற" என்கிறாள் என் அம்மா.

எனக்குள் உறங்கும் கலைஞனை எழுப்பி, அவனை மீண்டும் தயார் செய்ய வேண்டும். ஒரு தடவையாவது, "பரவாக இல்லை. இப்போ கொஞ்சம் தேறி விட்டாய்" என்று அம்மா சொல்லணும்.
பெங்களுரில், நல்ல மிருதங்க வாத்தியார் இருக்கிறாரா??

October 30, 2007

என்று மடியும் இந்த அடிமையின் மோகம்??

அரசியல்வாதிகளையும் சினிமா நடிகர்களையும் கடவுளுக்கு நிகராக மதித்து வணங்கும் கேவலமான கலாச்சாரம், நமது நாட்டைத்தவிர வேறெங்கும் காண முடியாது. அதுவும் அரசியல் தொ(கு)ண்டர்கள் தனது தலைவர்களுக்கு செய்யும் மரியாதை (கொஞ்சம் கேவலமா சொல்லணும்னா "காக்கா பிடி") அடிமைத் தனத்தின் உச்ச கட்டம் என்றே சொல்லலாம். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பது பழமொழி. இதற்கு மாற்றாக "அரசியல்வாதி வருவார்(ன்) பின்னே; தொ(கு)ண்டர்களின் வாழ்க கோஷம் வரும் முன்னே" என்று சொல்லலாம்.

இந்த அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் இந்த வாழ்த்தொலி கேட்காமலிருக்கவே முடியாது போலும். எங்கு போனாலும் ஒரு தொண்டர் படை கூடவே வேண்டும். கட்சியின் அடிமட்ட வட்டச் செயலாளரிலிருந்து கட்சியின் தலைவர் முதல் அவரவர் வசதிக்கேற்ப தொண்டர் படை உண்டு. ஒரு அரசியல்வாதி எழும் முதல் இரவு உரங்கச் செல்லும் வரை தனது கட்சியாளர்களின் கோஷம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.


இந்த அரசியல் தொண்டர்களுக்கு தனது கட்சித் தலைவனே கடவுள். தனது குடும்பம் எக்கேடு கெட்டுப் போனாலும் அவனுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஆனால், தலைவரின் குடும்பம் தழைக்க வேண்டும். தனது மனைவி மக்களின் பிறந்த நாட்கள் அவன் நினைவில் இருக்காது. ஆனால் தலவரின் மைத்துணன் பிறந்த நாள் ஒரு வாரம் முன்பாகவே அவன் மூளையில் உதித்து விடும். மனைவியின் பிறந்த நாளன்று அவளுக்கு ஒரு முழ பூ வாங்கிக் கொடுக்க காசிருக்காது. ஆனால் தலைவனின் வப்பாட்டியின் (மன்னிச்சுக்கோங்க! என் வயித்தெறிச்சல் இப்படிப்பட்ட வார்த்தைகளெல்லாம் வந்து தொலைக்கிறது) பிறந்த நாளுக்கு கடன் வாங்கி கட் வைத்து, பாலபிஷேகம் செய்வான். தந்தையின் சொல் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது போலிருக்கும். ஆனால் தலைவனின் சொல் மந்திரமாகும். தலைவனுக்காக உயிரை விடும் கேவலமான எண்ணமும் நமது தொண்டர்களிடையே உண்டு.

அடிமைத்தனத்தை 60 ஆண்டுகளுக்கு முன் தகர்த்தெறிந்த நமது நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் அடிமைகள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட அடிமைகள் இருப்பது தான் ஒவ்வொரு அரசியவாதியின் பலம். இவர்கள் அடிமையாக இருக்கும் வரை தான் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய முடியும். இந்த அடிமைத்தனத்தின் நதி மூலம் ரிஷி மூலம் என்ன?

நமது நாட்டில் மன்னராட்சி நிலவ வந்த காலத்திலிருந்தே, இப்படி அடிமைத்தனத்தை வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பண்டைய காலத்து மக்கள், மன்னரை கடவுளுக்கு நிகராக வணங்கினர். மன்னனும் மக்கள் சேவை மகேசன் சேவை என்று நினைத்த காலம் அது.

ஒரு மன்னன் ஒரு நாட்டை அபகரித்து அந்நாட்டில் வெற்றி நடை செய்யும் போது, மன்னனை ஆதரித்தால் தான், தங்களால் அமைதியாக வாழ முடியும் என்பதை மக்கள் நங்கு அறிந்திருந்தனர். ஆதலால் எந்த மன்னன் தங்களது நாட்டை ஆண்டாலும் அவனுக்கு வாழ்க கோஷம் போட்டே பழகிக்கொண்டனர். இப்படி ஆரம்பித்தது தான், இந்த கோஷம் போடும் பழக்கம். இப்படி தோன்றியது தான் இந்த அடிமைத்தனப் போக்கு.

பிறகு நம் மன்னர்களை புகழ்ந்து பாடிய புலவர்கள். இப்புலவர்களுக்கு மன்னர்களை குஷிப்படுத்தினால்தான், அவர்களுக்கு வரும்படி. தான் கற்ற கல்வியை, தனது புலமையை, ஒரு தனி மனித வழிபாட்டிற்காகப் பயன் படுத்தினர். ஆக ஆட்சியில் இருப்பவனை ஒரு கடவுளாக நினைத்து, தன்னை கடவுளின் அடிமையாக பாவித்து, இந்த அடிமைத்தனத்திற்கு வித்திட்டனர்.

பின்னர் வந்த மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும், நமது இந்த அடிமைப் போக்கை நன்றாக பயன் படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நாம் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுக்காதது தான்.

இப்படி காலம் காலமாக ஊறிய இந்த அடிமைத்தனம், இன்றும் வெகுவான நம் மக்களின் மனதிலே ஊறிக்கிடக்கிறது. அது தான் அவர்களை, ஒரு அரசியல்வாதியையோ சினிமா நடிகனையோ கடவுளுக்கு நிகராக எண்ண வைக்கிறது?

இந்த அடிமைத்தனம் அரசியல் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் இருப்பது தான் மனதை உறைய வைக்கும் உண்மை. இன்று மென்பொருள் துறையில் வேலை பார்க்கும் எல்லோருமே ஒரு விதமான அடிமைகள் தான். மென் பொருள் தயாரிப்பு இந்தியாவிலிருந்து நடப்பதால் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணச்செலவை குறைக்கின்றனர். இந்தியாவின் மேலுள்ள எந்த மோகத்திலும் அவர்கள் இந்த வேலையை இந்தியாவிற்கு அனுப்பிவிடவில்லை. இதனால், ஏராளமான நமது மக்களுக்கு வேலை கிடைத்தது உண்மை தான். ஆனால், வெளிநாட்டிலுள்ள client என்ன சொல்கிறானோ அதுவே வேத மந்திரம். அவன் நம்மை இரவு நேர conference 'க்கு அழைத்தால் நாம் இருந்து தான் ஆக வேண்டும். அவன் இரவு வெகு நேரம் அலுவலகத்தில் இருந்து விட மாட்டான். ஆனால் நாம் இருந்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், அவன் client. நமக்கு தீபாவளி பொங்கல் என்றாலும், நமது அரசு விடுமுறை அளித்திருந்தாலும், அப்பண்டிகளைக் கொண்டாட அவனிடம் ஒப்புதல் வாங்க வாங்க வேண்டும். நீ இந்த வார இறுதியில் தீபாவளி கொண்டாடிக்கொள் என்று அவன் சொன்னாலும் அதற்கு மறு பேச்சு கிடையாது. "அப்படியே ஆகட்டுங்க" என்று தலையாட்ட வேண்டும். இதையும் அடித்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது?

ஏன் நமக்கிந்த அடிமைத்தனம்? என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?


October 24, 2007

நாங்க சிங்கம்'ல

முதலில் தலைப்பை வடிவேலு ஸ்டைலில் (புருவத்தை உயர்த்திக்கொண்டு) படித்துக்கொள்ளவும்.
கடந்த மூன்று வாரமாக, இந்தியா ஆஸ்திரேலியாவிடம் படு மோசமாக விளையாடி ஒரு நாள் தொடரை இழந்தது. சைமண்ட்ஸ், பான்டிங், கில்க்ரிஸ்ட், ஹேடன் மட்டுமல்லாமல் வற்ரவன் போறவன் எல்லாம் நமது பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். அதிலும் சைமன்ட்ஸின் ஆட்டத்திற்கு எதிராக நமது பந்து வீச்சாளர்கள் ஒன்றுமே செய்ய முடியவில்லை. போதாக்குறைக்கு கைக்கு வந்த கட்சையும் விட்டு வயித்தெறிச்சலை கிளப்பினான் சிரிசாந்த். பந்து வீச்சு தான் இப்படி என்றால் பட்டிங் கேட்கவே வேண்டாம். உத்தப்பா தவிர்த்து யாரிடமும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை துணிந்து எதிர்க்கும் துணிச்சல் எவரிடமும் இல்லை. சரி, என்னத்தைப் புலம்பி என்ன பண்ண?
இப்படி உடைந்து வெதும்பியிருந்த நேரத்தில் தான் வந்தது 20- 20 போட்டி. நமது வீரர்கள் 3 வாரங்களுக்கு முன் தான் உலகக்கோப்பையை வென்றிருந்த நேரத்தில் மீண்டும் ஆஸ்திரேலியாவை சந்திக்கும் நிர்பந்தம். 20- 20 உலக்கோப்பை போட்டியில் நாம் வென்றது வெறும் அதிர்ஷ்டமில்லை என்று மீண்டும் நிரூபிக்க வேண்டிய தருணம். துவண்டு போயிருந்த இந்திய அணியை ஆஸ்திரேலியர்கள் துவைத்தெடுத்து துவட்டிவிடுவார்கள் (ஆ! ரைமிங் சூப்பராக்கீதுபா) என்று எல்லா பத்திரைகளும், ஊடகங்களும் பந்தயம் கட்டினர். ஆனால், நமது வீரர்கள், கிரிக்கெட்டின் இந்த புதிய ரூபத்தில் யார் சாம்பியன் என்பதை மீண்டும் நீருபித்து விட்டனர். தோனிக்கு பதில் வடிவேலு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்திருந்தால், "ஹ 20-20'ல மட்டும் நாங்க சிங்கம்ல" என்று அவர் பாணியில் சொல்லியிருப்பார்.
எதற்க்காக கிரிக்கெட்டிற்கு இந்த புதிய பரிணாமம்? ஏன் இவ்வளவு விளம்பரம்? இவ்வளவு பணச்செலவு?
கிரிக்கெட்டை உலக்குக்கு கொடுத்த பெருமை ஆங்கிலேயர்களுக்கே சேரும். முதலில் 5 நாட்கள் (டெஸ்ட்) விளையாட்டாக இருந்த கிரிக்கெட்டை, ஒரு நாள் போட்டியாக மாற்றியவர்கள், ஆஸ்திரேலியர்கள். டெஸ்ட் போட்டிகள் மந்தமாக நடந்ததால், கிரிக்கெட்டை விட மற்ற விளையாட்டுகளில் மக்கள் ஆர்வம் காட்ட அரம்பித்தனர். இதற்காகத்தான் ஒரு நாள் போட்டிகள் கொண்டுவரப்பட்டன.
இந்த ஒரு நாள் போடிகளும், ஒரு மாதிரி யூகிக்கும் படியாக (predictable) ஆனபிறகு, ஒரு நாள் போட்டியும் கசக்க ஆரம்பித்தது. மக்கள் (இந்திய உபகண்ட நாடுகளைத் தவிற) பிற விளையாட்டுகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தனர். குழந்தைகளும் கிரிக்கெட்டை விட, மற்ற விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்து வந்தனர். மேலும், ஒரு நாள் போட்டி குறைந்த பட்சம் 9 மணி நேரம் நடக்கக் கூடியது. இதைப் பார்க்க வேண்டுமானால், ஒரு நாள் முழுக்க வீணாக்க வேண்டும். இதற்கெல்லாம், வடிகாலாக வந்தது, 20 - 20 போட்டிகள். இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் மட்டும் விளையாடும் போட்டி.
இதில் விறுவிறுப்பு, உற்சாகம், வேகம் என எல்லாமே அதிகம். ஒவ்வொரு பந்திலும் ரன் எடுக்க வேண்டிய நிர்பந்தம். கடைசி பந்து வீசும் வரையில் ஆட்டம் எந்த திசையிலும் திரும்பலாம். யார் வெற்றி பெறுவர் என்ற யூகிப்புத்தன்மை (predictablility) மிகக் குறைவு. உதாரணம், ஆஸ்திராலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தியது. ஏன் உலக்கோப்பை இறுதி ஆட்டம் கூட கடைசி வரையில் யார் வெற்றி பெறுவர் என்று எண்ண முடியவில்லை. ஹர்பஜனின் ஒரு ஓவர் (மிஸ்பா உல் கக் வ்ளாசியது) ஆட்டத்தின் திசையைத் திருப்பியது.
ஒரு சினிமா பார்ப்பது போல் ஒரு கிரிக்கெட் போட்டியையும் 3 மணி நேரத்தில் பார்த்து விட்டு மற்ற வேலையை கவனிக்கலாம்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட்டை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்ல இது ஒரு நல்ல யுக்தி. உடனடி முடிவு (instant result) நாடும் வேகமான உலக கலாசாரத்திற்கு 20 - 20 ஒரு நல்ல ஊடகம். இப்போட்டியினால், கிரிக்கெட்டே அறிந்திராத சீனா, ஜப்பான், அமெரிக்கா, மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட்டை தெரிந்து கொள்ளும் ஒரு நல்ல வாய்ப்பு.
மற்ற பிற நாடுகள் கிரிக்கெட்டில் நல்ல தேர்ச்சி கொண்டு நம்மை வீழ்த்தும் வரை நாம் சொல்லிக்கொண்டிருக்கலாம், "20 - 20 ல நாங்க சிங்கம்'ல" !!!!!!!!

September 20, 2007

இயற்கையை அழித்திடலாகுமா


இன்று நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் விஷயம் ராமர் பாலத்தை உடைக்கலாகாது என்பது தான். இதை கலாச்சாரச் சின்னம் வேறு சொல்கிறார்கள். தி.மு.க அரசு ஹிந்துக்கள் மேல் உள்ள த்வேஷத்தில் இந்த பாலத்தை உடைத்தே தீர வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். ராமர் என்ன கொத்தனாரா என்ற கேவலமான அறிக்கை வேறு.





சரி, இந்த ராமர் பாலப் பிரச்னை எங்கிருந்து திடீரென்று முளைத்தது?கீழை நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் தமிழகத் துறைமுகங்களுக்கு வருவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இந்த திட்டத்தினால் தமிழகத்தில் வர்த்தகம் பெருகும், வருமானமும் பெருகும் என்ற எண்ணத்தில், பாக் ஜலசந்தியை ஆழப்படுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த திட்டம் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு புறமிருக்க இத்திட்டட்தினால் யாதொரு பயனுமில்லை என்று ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இப்பாலத்தை உடைக்கக் கூடாதென்று சொல்பர்கள், இத்திட்டம் தொடங்கும் போது எங்கு போனார்கள்? இது ராமர் கட்டியது தான் என்று சொல்கிறது ஒரு கும்பல். ராமர் என்ன கொத்தனாரா என்று (கேவலமான) கேட்கிறது மற்றொரு கும்பல். இவ்விரண்டிற்கும் இடையே மாடிக்கொண்டு இரண்டு உயிர்கள் வேறு பரிதாபமாக பரிபோயின.


ஆனால் எல்லோரும் மறந்து போனதொரு விஷயம், கடலை ஆழ்படுத்தும் செயல். மனித குலம் தோன்றிய நாள் முதலே மனிதனுக்கு பெரிய விந்தையாக இருந்து வருவது காற்று, ஆகாயம், நெருப்பு, நிலம் மற்றும் நீர். ஆதலால் தான் இதை ஐம்பூதங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உலகிலுள்ள எல்லா பொருளும் இவற்றிலிருந்து தான் வந்ததென்று நம் முன்னோர்கள் கருதினர். இதில் ஆத்திகமோ நாத்திகமோ இல்லை. ஆதலால் தான் மனிதன் இந்த சக்திகளுக்கு மனித உருவம் கொடுத்து வணங்கலானான். இயற்கையை வணங்குவது தவறல்லவே.


தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலில் கப்பல்கள் செல்லுமளவு ஆழமில்லாதது தமிழகத்திற்கும் நாட்டுக்கும் நல்லதாககூட இருக்கலாமே. இந்த ஜலசந்தியை ஆழப்படுத்தினால், இந்த கடற்பகுதி சர்வ்வதேச கடல் பகுதியாகிவிடும். அமெரிக்க உளவுத்துறை இந்திய கடற்பகுதிகளை வேவு பார்க்க நாமே வசதி செய்து கொடுக்கிறோம்.
நாம் ஏன் இயற்கையின் நியதியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? இப்பகுதியில் ஏற்கனவே சுனாமி வந்து பேரழிவை ஒன்றை ஏற்படுத்திச் சென்று விட்டது. இன்னமும் தமிழக கடற்கறையோரம் கடல் கொந்தளித்துக்கொன்டிருக்கிறது. அமைதியாய் இருக்கும் என்னை ஏண்டா சீண்டுகிறீர்கள் என்று கடல் சொல்வது போல் உள்ளது.
ராமர் பாலம் (அல்லது ஆதாம் பாலமோ) இயற்கையாகப் படைத்த ஒரு பாறை என்றால், அதை ஏன் உடைத்திட இவ்வலவு நாட்டம் காட்ட வேண்டும். சில நாட்களுக்கு முன் பெங்களூர் அருகே ஷிவ சமுத்திரம் என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு காவிரிக்கு குறுக்கே இரண்டு பாலங்கள். ஒன்று இன்றைய தொழில் நுட்பத்து வைத்து, குறைந்த தொலைவில் கவிரிக்கு குறுக்கே ஒரு பாலம். அங்கிருந்து சில தொலைவில், பல வருடங்களு முன் கற்களால் கட்டப்பட்ட இன்னொரு பாலம். இதில் ஸ்வாரஸ்யமான இஷயம் என்னவென்றால், அப்பாலம் சற்றே வளைந்து சென்றது. அதைக்கட்டியவர்கள், காவிரி எங்கெல்லாம் ஆழம் குறைவாகவும், ஆற்றின் போக்கு சற்றே குறைவாக இருந்ததோ அந்த இடஙளின் வழியே பாலத்தை அமைத்திருந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினரோ, ஆற்றின் போக்கை எதிர்த்து பாலத்தைக் கட்டியிருந்தனர். பழைய பாலத்தைப் பார்க்கும் போது, "காவிரி அன்னையே, உன்னை வணங்குகிறேன். உன் போக்கிற்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல், நான் பாலத்தைக் கட்டுகிறேன்" என்று மனிதன் கூருவது போல் உள்ளது. அன்றைய மக்கள் இயற்கையை வணங்கினர். இன்றைய தலைமுறையினர் இயற்கையை எதிர்க்கின்றனர்.

இந்த பாழாப்போன திருவள்ளுவர் இயற்கயின் போக்கை மாற்றக்கூடாதுன்னு ஏதாவது குறள் எழுதித் தொலைத்திருக்கக் கூடாதா?
மனிதர்களே, இயற்கையை வெல்ல நினைத்தோமேயேனால், இயற்கை நம்மை அழித்து விடும்

December 24, 2006

ந்யான் ஒரு மலையாளப்படம் கண்டு

கல்யாணம் ஆன பிறகு இது மட்டும் நடந்து விடக்கூடாது என்ற பயம் சில காலம் இருந்து வந்தது. கல்யாணம் ஆகி இறண்டு ஆண்டுகள் ஓடியும், அது நடக்காதலால், சற்று நிம்மதி வந்தது. (பொடி வச்சது போதும், விஷயத்துக்கு வாடா). எனது வலைக்கிறுக்கலகளை முதன் முதலாகப் படிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எனது எல்லா பதிவிலும், என்னை வாரும் ஒரு கதாபத்திரமும் உண்டு. அது என் மனசாட்சி தான். என்ன அதற்கு எஸ்.ஜே.சூர்யா மாதிரி நீல நிற உடை அணிவிக்கவ்வில்லை. அதனால் அவன் பேசும் வசனங்களை மட்டும் " "க்கு நடுவில் போட்டு விடுகிறேன்.
"என்னைத்தான் இன்ட்ரொ குடுத்தாச்சுல்ல, விஷயத்துச்சொல்லு". இதுவும் என் ம.சா. தான்.

என் மனைவி கேரளாவிலே மலையாளத்திலேயே பரைந்து வளர்ந்தவள். நானோ மலையாளத்தை கிண்டலடித்தே வளர்ந்தவன். மலபார் போலீஸ் கவுண்ட மணி ரகம். கல்யாணத்திற்குப் பிறகு எனது தலையாளம் ஆகிவிடுமோ என்ற உறுத்தல் இருந்து கொண்டெ இருந்தது. இதை விட பெரிய பயம், வீட்டில் சன் டி.வி.க்கும் சூர்யவுக்கும் சண்டை வருமோ என்றும் நினைத்திருக்கிறேன். இதையெல்லாம் விட, நம்மளை ஒக்காத்தி வச்சு மலையாளப் படம் பார்க்க வச்சுடக்கூடாதேன்னு தான் பெரிய பயம்.
நேற்று அந்த கொடுமை நடந்தேறி விட்டது. என்னை வலுக்கட்டாயமாக மலையாளப் படம் பார்த்தே ஆக வேண்டும் என்று கட்டளை. Domestic Violence'க்கு எதிராக சட்டமெல்லாம் கொண்டுவந்துவிட்டார்கள். இதெல்லாம் அதில் அடங்காதா??
என் மனைவி எடுத்து வந்த படத்தின் பெயர் Classmates. "சரிதான் கேரளத்தில் இன்னும் கேளிக்கை வரி விலக்குச் சலுகை இன்னும் அமலுக்கு வரவில்லை போலிருக்கு. எலாத்திலுமே பக்கத்து மாநிலத்தவர் சற்று மந்தம் தான் போலிருக்கு. "டேய் ஏற்கனவே முல்லைபெரியாறு விஷயத்துல அவனவன் மீசையையும் தாடியையும் முறுக்கிக்கிட்டு அலையிறானுவ. நீ வேற எரியுர தீயில பெட்ரோல ஊத்தாதடா".
சரி, படத்துல நடித்திருப்பது, "பாரிஜாதம்" ப்ருதிவி ராஜ், காவ்யா மாதவன் மற்றும் சில அறியாத தெரியாத முகங்கள். யாரிந்த காவ்ய மாதவன் என்று எண்ணுபவர்களுக்கு ஒரு செய்தி. தென்காசிப்பட்டணம் என்ற டப்பா படத்தில் சரத் குமாருக்கு தங்கையாக வருமே ஒரு அட்டு ஃபிகரு. அதே தான். "தமிழில் டப்பா போணியாகாததெல்லாம், மலையாளத்துக்கு போய்விடும்".
மலையாளப்படம் பார்ப்பவர்களுக்கு சற்றே கூடுதலாக பொறுமை வேண்டும். ஏனென்றால் படம் முதல் கியரிலேயே தான் பயணிக்கும். அவ்வப்போது பின்னாடியும் போகும். "அதாங்க ஃப்ளாஷ் பேக்கு".
படத்தில் நாயகனின் பெயர், சுகுமார். அவனை அழைப்பதை வைத்து பார்த்தோமேயானல், அவனது பெயரை ஆங்கிலத்தில் SUGUMAR என்று தான் எழுத வேண்டும். படத்தின் பட்ஜெட், 1 கோடியாவது எட்டியிருக்குமா என்பது சந்தேகம் தான். "நம்மூர் தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ளவேன்டியது". 60 நிமிடங்கள் ஓடி, 2-3 பாடுக்கள் முடிந்தும் படத்தின் கதை என்னவென்று தெரியவில்லை. ஒருவரையொருவர் முறைத்து முறைத்துப் பார்த்துக்கொள்கின்றனர். டேய் ஏதாவது பண்ணுங்களேண்டா என்று கத்த வேண்டும் போலிருந்தது. "சரிடா, என்ன தான் கதை? அதைச் சொல்லவே மாட்ட்டியா". ஏதோ லவ் ஃபெலியர் பற்றிய கதை என்று மட்டும் தெரிந்தது. எல்லோர் மூஞ்சியில் எப்போதும் வழிந்தோடும் ஒரு வ்விதமான சோகம். கதாநாயகன் ஆறு மாதம் வளர்ந்த தாடியுடனேயே இருக்கிறான். எடுத்த எடுப்பிலேயே தற்கொலைக்கு முயற்சிக்கிறான். ஃப்ளாஷ் பேக்கில், சக மாணவியுடன், சகட்டு மேனிக்கு மோதுகிறான். ஒரு சூழ் நிலையில் அவள் அடிபடும் போது அவள் காயங்களுக்கு மருந்தளிக்கிறான். மோதல்ல ஆரம்பித்து காதலில் முடியும் இத்துப்போன பழைய ஃபார்முலா தான். அப்படியே ஒரு டூயட். ஆதற்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. கண்கள் சொரிகி விட்டன. என் மனிவிக்கு என் மேல் ஒரு வழியாக கருணை வந்து விட்டது போலும். படத்தை நிறுத்தி விட்டாள்.

படத்தின் வசனங்கள் முழுவ்வதும் புரியாவிட்டாலும், சில கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:
- சும்மா சும்மா மாணவர்கள் மறியல் செய்கிறார்கள். கேரளாவில் இது சகஜமாம்.
- மாணவர்கள் சில பேர் வேஷ்டி அணிந்து கல்லூரிக்கு வருகிறார்கள் (இதுவும் சகஜமாம்).
- பின்னணி இசை என்பதே இருக்கவ்வில்லை. இயற்கை சத்தங்கள் தான். மியூசிக் டைரக்டருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பார்கள் போல.
- கேரளாவிலும் சூபர் ஸ்டார் மவுசு ஓங்கியிருக்கிருக்கு. ஆட்டம் போடுவதற்கு தலைவரின், அண்ணாமலை (வந்தேண்டா பால்காரன்) பாட்டு தான்.
- படத்தில் காட்டப்படும் கல்லூரியில் 100 பேருக்கு மேல் படிக்க மாட்டார்கள் போலிருக்கு.

இன்று காலை விழித்ததும் மாலை வந்து மறுபடியும் படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றாள். வடிவேளு குரலில் "மீண்டுமா" என்று கத்த வேண்டும் போலிருந்தது.

March 26, 2006

விடியலின் மறுபக்கம்

இன்றைக்கு உலகே நம்மைப் பார்த்து பிரமித்து நிற்கிறது. எல்லா சௌகர்யமும் கொண்ட அமெரிக்க மக்களே இந்தியாவை நினைத்தால் கதி கலங்கிப் போய் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையா? இல்லை! மற்ற பிற தேசங்களிலிருந்து நம் நாட்டில் இறக்குமதியாகும் வேலை வாய்ப்புகள் தான் இதற்குக் காரணம். மென் பொருள் மற்றும் மென் பொருளை உபயோகித்து செயல் படும் துறைகளில் வரலாறு காணாத அளவிற்கு இன்று வேலை வெடித்துத் தான் போயிருக்கிறது. உங்களுக்கு C C++, ஜாவா இதில் ஏதாவதொன்றில் இருநூறு வரிகள் எழுதத் தெரிந்து அதை கணினியிலும் செலுத்திவிட்டால் போதும் ஏதாவது ஒரு கம்பெனியில் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை நிச்சயம். நுனி நாக்கால் அங்கிலமும் பேசத் தெரிந்து மின்னஞ்சல் அனுப்பத் தெரிந்தால் போதும். ஏதாவது கால் சென்டரில் ஏழாயிரம் ரூபாய்க்கு வேலை நிச்சயம்.

இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத முன்னேற்றம் அடந்துள்ளது. பங்குச்சந்தையின் சென்செக்ஸ் எகிறிக்கொண்டே போகிறது. உலகின் அத்தனை தேசங்களின் பார்வையையும் இன்று நம் பக்கம் திருப்பியிருக்கிறோம். அத்தனை வியாபார ஸ்தாபனக்களும் இந்தியாவில் ஒரு மென்பொருள் உருவாக்கும் கிளை வைத்திருந்தால் அது கௌரவத்தின் சின்னமாக மதிக்கபடுகிறது. ஒவ்வொரு கம்பெனியும் தனது வாடிக்கையாளர் உதவி (customer support) மற்றும் தகவல் மையத்தையும் (Information Center)இந்தியாவிற்கு மாற்றுகின்றன. எங்கு திரும்பினாலும் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரங்கள். கை நிறைய சம்பளம், எல்லோர் கையிலும் மொபைல் ஃபோன், விலையுயர்ந்த ஆடைகள் என (இந்தத் துறைகளிலுள்ள) இளைஞர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. "ஆஹா இந்தியாவின் வேலை வாய்ப்புத் திண்டாட்டம் ஒழிந்து விட்டது. நமது பிள்ளைகளின் எதிர்காலம் விடிந்து விட்டது" என்று எத்தனையோ பெற்றோர்கள் நிம்மதிப் பெருமுச்சு விடுகின்றனர்.

ஆனால் எத்தனை பேர் இந்த விடியலின் மறுபக்கத்தை அறிவர்? இந்த விடியலின் மறுபக்கம் எவ்வளவு கொடூரமானது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விடியலுக்கு இன்றைய இளைஞர்கள் கொடுக்கும் விலை எவ்வளவு தெரியுமா?
பணம் அழிந்தால், ஒன்றும் ஆகிடாது. ஆனால் ஆரோக்கியமும் ஒழுக்கமும் ஒழிந்தால் எல்லாம் போய்விட்டதென்று காந்தி சொன்னார். ஆனால் இன்று பணத்திற்காக உடல் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் கலாசாரத்தையும் மொத்தமாக குழி தோண்டிப் புதைத்து வருகிறோம்.

மென் பொருள் தயாரிக்கும் வேலை பார்ப்பவர்களாவது காலை நேரத்தில் தான் வேலை பார்க்கின்றனர். எப்போதாவது தான் வேலைப் பளு அதிகமாகிறது. இது எல்லா துறையிலுமுள்ளது தான். அதிலும் ஒரு சிறு பகுதியினர் தான் நாள் பகல் பாராமல் வேலை பார்க்கின்றனர். அதுவும் சில வாரங்களுக்குத்தான். அப்புறம் மீண்டும் ஒன்பதிலிருந்து ஆறு மணி வரையிலுள்ள வேலை தான். இதையே தமிழில் உள்ள பிரபல வாரப் பத்திரிகை மென் பொருள் துறையில் எல்லோரும் இரவு பகல் பாராமல் வேலை பார்க்கின்றனர் என்று ஒரு தவறான தகவலைக் கொடுக்கிறது. மென் பொருள் தயாரிப்பில் ஆறு வருடம் வேலை பார்க்கிறேன் என்பதால் எனக்கு இந்த கருத்தைச் சொல்ல உரிமையுண்டு என நினைக்கிறேன்.

ஆனால் மென் பொருளை உபயோகித்து, புற அலுவலக வேலைத் துறைகளில் (Business Process Outsourcing)உள்ளவர்கள் தான் மிகவும் பாவப்பட்டவர்கள். அதிலும் வாடிக்கையாளர்களுக்கு பதில் கூறும் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களின் வேலை இன்னும் மோசமானது.

எப்போது நாம் கால் சென்டரைக் கூப்பிடுகிறோம். வாடிக்கையாளர் மையத்தை நாம் எப்போது அணுகுகிறோம். நமக்கு ஏதாவது ஒழுங்காக நடக்கவில்லை என்ற போது தானே. நமது கோபத்தையெல்லாம் நம்மிடம் பேசும் ஒரு வாடிக்கையாளர் உதவி அலுவலரிடம் கொட்டித் தீர்க்கிறோம். அப்படிப் பார்க்கும் போது இந்த அலுவலர் எதிர்கொள்ளும் ஓவ்வொரு வாடிக்கையாளரும் தனது கோபத்தை இவர் மேல் கொட்டுகிறார்கள். ஒரு சிலர் அவதூறான வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர். இதில் வேடிக்கையென்னவென்றால் இவரால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. தகவலைக் கொடுப்பது மட்டுமே இவரது வேலை.

தொலைபேசி நிறுவனம் அதிகமாக கட்டணம் கேட்கின்றதா? கூப்பிடு கால் சென்டரை. பாவம் ஏதோ இளைஞரோ இளைஞியோ நமது கோபத்திற்கு ஆளாகின்றனர். இவர்கள் பணி நேரம் என்னவோ எட்டு மணி நேரம் தான். ஆனாலும் வேலையிலுள்ள வரை வாடிக்கையாளரிடமிருந்து அவதூறு வார்த்தைகள் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? இதனால் உண்டாவது; மன அழுத்தம். அதைப் போக்கிகொள்ள இவர்கள் புகைப் பழக்கத்தை நாட வேண்டியிருக்கிறது. பெங்களூரிலுள்ள ஒரு பிரபல கால் சென்டர் வாசலில் நிறைய பேர் (பெண்கள் கூட!!!) புகை பிடித்த வண்ணம் இருக்கின்றனர். புகைபிடிக்கும் பழக்கத்தோடு நின்றுவிடாமல், தவறான உறவிலும் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பது தான் திடுக்கிடும் உண்மை. சில நாட்களுக்கு முன் ஒரு கால் சென்டரிலுள்ள கழிப்பறை அடைப்பை அகற்றும் போது நிறைய ஆணுறைகளை எடுத்திருக்கிறார்கள். எங்கே போகிறது இந்திய கலாசாரம்??

சரி, இவர்களது பணி நேரம் எட்டு மணிநேரம் தான் என்றாலும், எப்போது வேலை பார்க்கிறார்கள். வேலை ஆரம்பிப்பதே மாலை ஐந்து மணி முதல் தான். அப்போது தான் மேலை நாடுகள் இயங்க ஆரம்பிக்கின்றன. இவர்கள் ஒழுங்காக உறங்குவதுமில்லை. ஐந்து மணி முதல் இரவு ஒரு மணி வரை ஒரு பாட்ச். அடுத்த பாட்ச் ஒரு மணி முதல் ஒன்பது மணி வரை. வீடு வரை கார் வந்து அழைத்துப் போகிறது, காரிலேயே வீடு வரை விட்டுப் போகிறார்கள். இருந்தாலும் காலை ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தால் எப்படி உறங்க முடியும். ஆண்களாவது ஒரு வாரு சரி செய்து கொள்வார்கள். ஆனால் இந்தத் துறையில் முக்கால்வாசி, பெண்கள் தான் வேலை பார்க்கிறார்கள். அவர்களது நிலை இன்னும் மோசம். திருமணத்திற்குப் பெண் தேடும் போது கால் சென்டரில் வேலை பார்க்கும் வேண்டாம் என்றளவிற்கு பெற்றோர்கள் வந்துள்ளனர்.
இவர்களுக்கு தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் எதற்கும் விடுமுறை கிடையாது. இவர்களது வாடிக்கையாளர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களோ அவர்களது விடுமுறைகள் தான் இவர்களுக்கு விடுமுறை.

இப்படி உடலையும் வருத்தி கலாசாரத்தையும் மறந்து ஒழுக்கத்தையும் விட்டு சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு நமது இளைஞர்கள் எங்கே போகின்றனர். இவர்களது நிலமையை மாற்ற கால் சென்டர் நிறுவனங்கள் என்ன வேணாலும் செய்து தொலைக்கட்டும். நம்மால் இவர்களது நிலை மாற என்ன செய்ய முடியும். முடிந்த வரையில் எந்த ஒரு கால் சென்டர் அலுவலரிடமும் கடுமையாக பேசுவதை தவிர்ப்போம். அவதூறு வார்த்தைகளால் அவர்களது மனம் உளைச்சலுக்குள்ளாக்குவதை தடுப்போம். இவர்களும் மனிதர்கள் தான். நம் நாடு அடைந்திருக்கும் பொருளாதார விடியலிற்கு முழு அர்த்தம் கொடுப்போம்.

March 09, 2006

அனுபவம் புதுமை

எத்தனை பேர் இந்த பாடலைக் கேட்டிருப்பீர்கள்? காதலிக்க நேரமில்லை படத்தைப் பார்த்த யாரும் இந்தப் பாடலை ரசிக்காமல் இருந்ததில்லை. சரி சரி, ரொம்பவும் கற்பனைக் குதிரையை அவிழ்த்து விட வேண்டாம். இந்த வாரம் ஒரு புதுமையான அனுபவம் கிட்டியது. அது தான் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை நேர்காணும் வைபவம். கொஞ்சம் எல்லோருக்கும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் campus interview.
எங்கள் கம்பெனி தேர்ந்தெடுத்தது பெங்களூரிலுள்ள கல்லூரியை. நான், எனது மேலாளர் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறையைச் சார்ந்த அதிகாரி (Human Resource Manager) என்று மூன்று பேர் போயிருந்தோம்.

நிறைய மாணவவர்களைக் காண நேரிட்டது. அதுவும் பெங்களூர் கல்லூரி, கேட்கவா வேணும். ச, காலேஜுன்னா!!!, இப்படி இருக்கணும். நாமளும் படிச்சோமே என்ற ஆதங்கமும் மதில் எழுந்தது. (சில பேருக்குத்தான் இந்த ஆதங்கத்தின் உண்மையான அர்த்தம் புரியும்!!)

எங்களது முந்நேர்காணல் உறையைக் (Preplacement Talk) கேட்க ஒரு பெருங்கூட்டமே கூடிற்று. நானும் எனது கம்பெனி பற்றி ஒரு சில வார்த்தைகள் அவிழ்த்து விட்டேன். (மைக்கை கையில புடிச்சா அரசியல்வாதி மாதிரி பேசிட்டே இருப்பியேடா!!!).

ஒவ்வொரு மாணவனின் கண்களிலும் ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு, ஏக்கம், ஒளி என பல வகையான அர்த்தங்கள். அவர்களது கண்களே ஆயிரம் கதைகள் சொல்லின. எவ்வளவு பேர் வீம்புக்கு எங்களது நேர்காணலில் பங்கு கொண்டார்களோ, எவ்வளவு பேர் இந்த கம்பெனியாவது நமக்கு ஒரு வேலை போட்டுத்தருவார்களோ என்று எண்ணியவை எத்தனை மனங்கள், ஈசன் தான் அறிவார். ஒரு மாதிரியாக எழுத்து தேர்வு ஆரம்பமானது. அந்த 45 நிமிட இடைவேளையில் என மனக்கடலில் உதித்து மறைந்தன ஆயிராமாயிரம் எண்ண அலைகள்.

இதே போன்று தானே ஒரு காலத்தில் நாநும் எத்தனை கம்பெனி படியேறி விண்ணப்பம் செய்திருப்பேன். எவ்வளவு முறை எழுத்துத் தேர்விலேயே நிராகரிக்கப் பட்டு அவமானம் அடைந்திருப்பேன். ஒவ்வொரு முறை நான் ஏதாவது தேர்வு எழுதும் போது என் அம்மா எத்தனை சாமிக்கு எவ்வளவு வேண்டியிருப்பாள். எனது தேர்வு முடிவை எதிர்பார்த்து ஆவலாய் இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை தோல்வி அடைந்த போதும் எவ்வளவு மனக்கஷ்டத்தையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் எனக்கு ஆறுதல் சொல்லியிருப்பாள். எனது மகனும் ஒரு நாள் கை நிறைய என்று சம்பாத்திக்க மாட்டானா என்று எவ்வளவு ஏங்கியிருப்பாள். "அம்மா!!! நான் செலக்ட் ஆகிட்டேன்" என்று சொன்னபோது எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். அந்த மாகிழ்ச்சியை என் தாயோடு பகிர்ந்துகொள்ள எனக்கு 15 நாள் ஆயிற்று.

இன்று இந்த மாணவர்களில் எத்தனை பேர் என்னைப் போன்று இருக்கிறார்களோ? எவ்வளவு அம்மாக்கள் தனது மகன்(ள்) இந்த கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்று எத்தனை சாமிகளுக்கு நேர்ந்து கொண்டார்களோ? எவ்வளவு பேர் நிராசை அடைந்தார்களோ?
நானறியாத அம்மாக்களே, உங்கள் மகனுக்கு என்னால் இந்த கம்பெனியில் வேலை கொடுக்க முடியவில்லை. ஆனால் உங்கள் மகனுக்கு வேறொரு நல்ல கம்பெனியில் கண்டிப்பாக வேலை கிடைக்கும், என்னை மன்னித்துவிடுங்கள், என்று மானசீகமாக மன்னிப்பு கோரிவிட்டு வெறும் மூன்று பேரை மற்றும் தேர்வு செய்தேன்.

March 07, 2006

விவஸ்தை கெட்ட அரசியல்

தமிழ் நாட்டில் இப்போது எங்கு பார்த்தாலும், தேர்தல் பற்றித் தான் பேச்சு. யார் யாருடன் கூட்டணி, யார் யாருக்கு எத்தனை சீட்டு, யார் யாருக்கு போட்டியிட இடம் கிடைக்கும் கிடைக்காது, இதை பற்றித்தான் எந்த நாளிதழ், மாத இதழ், வார இதழை புரட்டினாலும் வெளிப்படும் முதல் செய்தி. அதிலும் சென்ற வாரம் எந்த செய்தி முதல் இடத்தைப் பிடித்தது என்று ஒரு டாப் டென் நிகழ்ச்சி நடத்தினால், அது கண்டிப்பாக மதிமுக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பற்றித்தான்.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்று ஒரு புதுமொழியுண்டு. ஆனால் விவஸ்தை, தன்மானம் இது எதுவுமே இல்லையா?? அப்புறம் என்ன இக்கட்சியின் தலைவரை தன் மானச்சிங்கம் என்று வர்ணிப்பது. போயும் போயும் 12 சீட்டு அதிகமா கிடைக்கிறது என்பதற்க்காகவா கூட்டணியை மாற்றுவது? சட்ட மன்றத்தில் வெறும் 36 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு என்ன சாதித்து விட முடியும்??

இதே ஜெயலலிதாவை காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள் இந்த மதிமுக கட்சியினர். இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு எப்படி இவர்களால் நட்பு பாராட்ட முடியும்?

சரி இதே வைகோவை திட்டித்தீர்த்தவர் தானே ஜெயலலிதா, இவரை ஒண்ணரை ஆண்டுகள் சிறையில் அடைத்து மகிழ்ந்தாரே. இப்போது வோட்டு வேண்டும் என்பதற்காக இவரை அழைத்துக் கொள்வாரா?

பதவிக்காக கொள்கையையும் காசுக்காக சகோதரியைக் கூட்டி கொடுக்கும் நயவஞ்சகற்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. கூட்டிக் கொடுப்பவர்களுக்காவது தான் செய்வது தவறு என்பது தெரியும். அதை நியாயப் படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த மானங்கெட்ட அரசியல் வாதிகள் விவஸ்தை கெட்ட நடத்தையை என்னவென்று சொல்வது??

இப்படி ஒரு ஜனனாயகம் தேவை தானா??

November 02, 2005

கடவுளின் சொந்த ஊர்

"என்னப்பா, ஆவணி அவிட்டம் விநாயகர் சதுர்த்தி நவராத்திரின்னு ஒரே திருவிழா ஸ்பெஷலாவே இருக்கே, அடுத்து என்ன தீபாவளி பற்றி எழுதப் போறியா"ன்னு நண்பர் ஒருவர் எந்த வேளையில் கேட்டுத் தொலைத்தாரோ, இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பது தீபாவளி பற்றிய வலைப்பதிவு தான். இந்த வருஷம் நமக்கு தலை தீபாவளி வேறு. அதனால் இந்த வருடம் தீபாவளியை நான் கழித்தது என் மனைவியின் சொந்த ஊரான ஆலப்புழையில். கேரளாவில் தீபாவளி அவ்வளவு விமர்சையாகக் கொண்டாடுவது இல்லை. வெடிச் சத்தமே கேட்கவில்லை. மருந்துக்கூட ஒரு வெடிக்கடை கூட இல்லை. ஆஷியாநெட்டில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி கூட கிடையாது. :(
இப்படி இருக்க இந்த தீபாவளியை எப்படி விமர்சையாகக் கொண்டாடுவது என்று ஆலோசிக்கலானேன். சரி எல்லோரையும் கூட்டிக்கொண்டு எங்காவது சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.
பெண் பார்க்கச் சென்ற தினத்தன்றே இந்த ஊரை கிழக்குலகின் வெனிஸ் என்று சொன்னார்கள். (உண்மை வெனிஸை இவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று தெரியாது) ஊருக்குள்ளே ஏகப்பட்ட கால்வாய்க்கள் இருக்கிறதென்றும், மக்கள் படகுகளை போக்குவரத்து சாதனமாக பயன் படுத்துவார்கள் என்றும் கேள்விபட்டேன்.இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது.

இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது. ஒரிரண்டு கோவிலகளுக்கு மட்டும் சென்று விட்டு, வேறெங்கும் என்னை அழைத்துச் செல்ல வில்லை என் மனைவியானப் பட்டவள். அவளுக்கு இந்த கால்வாய்களையும் படகுகளையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போய்விட்டதாம். (எனக்கு இருட்டுக் கடை அல்வா பழகி விட்டதைப் போல்)
ஆனால் இம்முறை பிடிவாதமாக படகுச் சவாரி செய்தே ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டேன். என மனைவியின் கஸின்களை அழைத்துக் கொண்டு படகுச் சவாரிக்கு ஆயத்தமானோம்.
நல்ல வேளை அன்று வானிலையும் ஒத்துழைத்தது. முந்தைய தினம் மழை. தீபாவளி அன்று மழை ஏதும் பெய்யாமல் ஆதவன் மேகங்கள் படை சூழ வானிலே வட்டமிட்டான். அதனால் அவனது தாக்கமும் அதிகமில்லமல் we had a perfect day and weather for boating.

படகுத் துறையிலிருந்து படகு மெல்ல மெல்ல கால்வாயை கிழித்துக் கொண்டு புறப்பட்டது. (என்னவோ டைடானிக் நகருது மாதிரி சொல்லொதியேன்னு கேக்குறீயேளா??) இரு புறமும் அடர்த்தியாக தென்னை மரங்கள். அந்தக் காட்சியே மிக ரம்மியமாக இருந்தது.
போகும் வழியில் ஏகப்பட்ட படகுகள். இல்லை இல்லை இவற்றை படகு வீடுகள் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படகுக்குள்ளும் ஒரு நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகள் இருக்கின்றன. உள்ளேயே ஒரு ஹோட்டல் அறை போன்ற வசதியை செய்திருக்கிறார்கள். இதற்குள்ளேயே சில திங்கள் தங்கலாம். குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க ஒரு நல்ல வழி.

கால்வாயைத் தாண்டி படகு காயலுக்குள் சென்றது. அதுவரையில் முப்பதடி அகலம் கொண்ட கால்வாய், திடீரென ஒரு கடல் போல் காட்சியளித்தது. அக்கறையைக் காணவே இல்லை. எல்லாம் ஒரே நீல நிறம். சிறுசிறு படகுகள் ஆங்காங்கே காட்சியளித்தன. ஆஹா அந்த காட்சியை வர்ணிக்க வைரமுத்துவைத் தான் அழைத்து வர வேண்டும். நிறைய புகைப்படங்களை கிளிக்கித் தள்ளினேன். (டிஜிடல் கேமராவில் அதுவொரு வசதி. வேண்டாததை அழித்து விடலாம்).

இந்த ரம்மியமயமான காட்சியைப் பார்க்து விட்டுத் தான்,

கேரள நாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
என்று பாரதி பாடினார் போல.

சரி அவர் அடந்த மகிழ்ச்சி நாமும் ஏன் அடையக்கூடாது என்று, நாங்கள் அந்தாக்ஷரி எல்லாம் விளையாடினோம். இரண்டு மணி நேரம் கழிந்ததே தெரிய வில்லை. திபாவளியன்று ஒரு வெடி கூட பற்ற வைக்காவிட்டாலும் இப்படி ஒரு படகுச் சவாரி செய்தது மிகவும் இனிமையாய் இருந்தது.
இப்போது புரிகிறது கேரளத்தை கடவுளின் சொந்த ஊர் என்று ஏன் சொல்கிறார்கள். இவ்வளவு எழில் மிகு ஊரில் கடவுள் கண்டிப்பாக வாசம் செய்கிறார்.

நண்பன் ஒருவன், திருமணத்திற்குப் பின் தனது தேன் நிலவை ஆலப்புழையில் கழிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளன். இந்த வலைப் பதிவை படித்துவிட்டு, அடுத்த வாரமே தேன் நிலவுக்குச் சென்றால் கூட ஆச்சர்யமில்லை. :)