இந்த வீடியோவைப் பார்க்கவும்!!! வடிவேலுவின் இந்த காமெடி பீஸ் மிகவும் பிடித்ததொன்று.
என்னுடைய வேலையில் நிதமும் சீனத்து மக்களுடன் பேச வேண்டியிருக்கிறது. நாங்கள் துப்பித் துலக்கிய மென்பொருளை அவர்கள் தான் இப்போது, சோப்பு சீப்பெல்லாம் வைக்காத குறையாக சீவிச் சிங்காரித்து பராமரித்து வருகிறார்கள். ஒரு வரியை மாற்ற வேண்டும் என்றாலும் எங்களிடம் விபூதி இட்டுக் கொண்டுதான் மாற்றம் செய்ய வேண்டும். மென்பொருள் பராமரிப்பில் அவ்வளவு பெயர் போனவர்கள்(!) ஏதாவது ஏடா கூடமா செய்து தொலைத்து விடக் கூடாதே என்பதால், அவர்கள் செய்யும் மாற்றத்தையெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க வேண்டும்.
அவர்கள் செய்யும் சில மாற்றங்கள் ரொம்ப அபாயகரமானதாக இருக்கும். ஒரு பிரச்சினையைத் தீர்க்கும். ஆனால் இலவச இணைப்பாக ஓராயிரம் பிரச்னைகளை உருவாக்கும். சில சமயம் சம்பந்தமே இல்லாத இடத்திலெல்லாம், கை வைப்பார்கள். அதனால் கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்.
இங்கே தான் வருகிறது பிரச்சினை. இப்படி கண் கொத்திப் பாம்பாக இருக்க வேணும் என்பதால், தினமும் அவர்களோடு குறைந்தது ஒரு மணிநேரம் உரையாட வேண்டியிருக்கும். உரையாடணும் என்று சொல்வதை விட தொண்டைத் தண்ணி வத்த வைக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
அவர்கள் ஆங்கிலம் எப்படி படித்தார்களோ தெரியவில்லை, யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை. அவ்வளவு அமோகமான ஆங்கிலத்தில் பேசுவார்கள், எழுதுவார்கள்.
உதாரணத்திற்கு, ஒரு பிரச்சினை இருக்கிறது, அதற்குத் தீர்வு கிடைத்து விட்டதா, என்று கேட்டால், "Yes, I will found the fix for the issue" என்று பதில் வரும்.
இவர்கள் சொல்லுவதை எப்படி எடுத்துக் கொள்ள? ஏற்கனவே தீர்வு தெரிந்து விட்டதா, இல்லை இனிமேல் தான் தெரியப் போகிறதா. நாம் குழம்பிப் போய் அவர்களிடம் மீண்டும் கேட்டால், அக்ஷரம் மாறாமல், அதே பல்லவியைத் தான் பாடுவார்கள். இவர்களிடம் நான் வேலையைப் பற்றிப் பேசுவேனா, அல்லது ஆங்கிலம் கற்றுக் கொடுப்பேனா??
மேலேயுள்ள படத்தில் சங்கிலி முருகனுக்கு வரும் கோபம் தான் எனக்கும் வரும். பக்கத்திலிருப்பவனிடம், “ஏ ஒழுங்காத்தானே பேசறேன்” என்று அவ்வப்போது கேட்டுக் கொள்ளணும் போலிருக்கும். இவர்களிடம் பேசும் போது, pronoun, preposition, conjunction எதுவும் சேர்க்காமல் பேச வேண்டியிருக்கும். அப்படியும், நான் கேட்கும் கேள்விகு ஒழுங்கான பதில் இருக்காது.
சாம்பிளுக்கு சமீபத்தில் நடந்த ஒரு தொலைபேசி உரையாடல் இப்படித் தான் போனது.
நான் : "Have you analysed the defects? When can I expect a release for these issues?"
சீனாக்காரன் : “4 Issues still open"
நான் (மனசுக்குள்) : “டேய் வெளக்கெண்ணெய் 4 இஷ்யூக்கள் இருக்குன்னு எனக்குத்தெரியாதா”. கொஞ்சம் பொறுமையிழந்து, சத்தமாக ஆங்கில வாக்கியத்திலுள்ள எக்ஸ்ட்ரா வார்த்தைகளை நீக்கி விட்டு, “When you release code”?
சீனா: “In Next release, we fix all issues"
நான் : “டேய் ஆமாண்டா. எல்லா பிரச்சினையும் ஃபிக்ஸ் பண்ணிட்டுத் தான் நீ ரிலீஸ் பண்ணுவேன்னு தெரியும். அத்தத்தான் எப்போ எப்போ கொடுப்பே??” I need to plan for next build after you release code. So please tell when will you release?
அவன் எதிரில் இருந்தால், காலில் விழுந்து “யப்பா ராசா தயவு செய்து சொல்லிடு. என்னால் இதுக்கு மேல ஆங்கிலத்துல கேட்கத் தெரியவில்லை” என்று கதறியிருப்பேன்.
சீனா : "We release code for next build"
நான் : ஐயையோ இவன் ரிலீஸ் பண்ணினால் தானே build பண்ண முடியும். இவனுக்கு மெய்யாலுமே புரியவில்லையா, இல்லை விடாக்கண்டனாய் நான் கேட்பது புரியாதது போல் நடிக்கிறானா என்று தோணும். இப்போது பொறுமை முற்றிலும் இழந்து “ When release code. Tomorrow. I plan build tomorrow" என்று is was எதுவும் இல்லாமல் சொல்லணும்.
இப்போது தான் ஐயாவுக்கு உறைக்கும். ஆனாலும் சொல்லிவிட மாட்டான்.
"I send mail tomorrow" என்று சொல்லி மழுப்பிடுவான். என்ன புரிந்து கொண்டான், என்ன மெயில் செய்யப் போகிறானோ, இவன் என்னிக்குக் கொடுத்து, நான் என்றைக்கு அடுத்த வேலையைச் செய்யணும் என்ற திகிலோடு உரையாடலை முடிப்பேன். மெயிலில் ஒரு மாதிரி புரிபடற மாதிரி இருக்கும். இருந்தாலும் நாலு பேரிடம் காட்டி, அவர்களும் அதை ஊர்ஜிதப் படுத்திய பின்பே எனக்குக் கொஞ்சம் தைரியம் வரும்.
அவர்கள் கொடுத்த பென்பொருள் வரிகளை சரி பார்த்து திருத்தம் சொல்லுவதற்கு நாலு படி பால் குடிக்கணும். எப்படியோ, இவர்களோடு மல்லு கட்டுவது மெகா சீரியல் போல் நீண்டு கொண்டே தான் போகிறது. ஏதோ ஓரளவு கற்று வைத்திருந்த ஆங்கிலமும் மறக்காதிருக்க ஷேக்ஸ்பியர் அருள் பாலிப்பாராக.