Pages

April 28, 2010

ஆலய தரிசனம்

சென்னை வந்ததிலிருந்து வாழ்வில் ஏதாவது மாற்றம் வந்திருக்கிறதா, என்று பார்த்தால், நம்ம பக்தி மார்க்கப் போக்கு கொஞ்சம் ஜாஸ்தியாகியிருப்பது தான். வீட்டு வாசலிலேயே ஆஞ்சனேயர். கொஞ்சம் ஒரு எட்டு எடுத்து வைத்தால் ஆதிகேசவ பெருமாள். இந்தப் பக்கம் சுவர்ணபுரீஸ்வரர். பிரதோஷத்தினன்று கூட்டம் 3மணியிலிருந்தே அலை மோதுகிறது. இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனால் அயோத்தியா மண்டபம், காமாக்ஷி அம்மன் கோவில். இது போதாதென்று மரத்துக்கு மரம் பச்சை விநாயகர் , மேற்கே பார்த்த விநாயகர் என்று தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில்கள் வேறு.

உள்ளூர் கோயில்கள் போதாதென்று அக்கம்பக்கத்திலிருக்கும் க்ஷேத்திரங்களுக்கும் போகலாம் என்று போன வாரம் பஞ்ச பூதக்ஷ் க்ஷேத்திரத்தில் வாயு க்ஷேத்திரமான காளஹஸ்திக்குப் போகலாம் என்று முடிவானது.

வேடுவன் ஒருவன் இறைவன் மேல் கொண்டிருந்த தீராத பற்றினால், காட்டிலிகுக்கும் லிங்கத்துக்கு, அர்ச்சகர் பூஜித்த பிறகு, தான் வேட்டையாடிய மிருகங்களை மாமிசங்களாகப்படைத்து வந்தானாம். இறைவன் சந்நதி்யில் இறைச்சி சிந்தியிருப்பதை மறுநாள் பார்த்த அர்ச்சகர், சினம் கொள்வாராம். தாம் பூஜிக்கும் இறைவனை இப்படி்யொருவன் அவமதிக்கிறானே என்ற கோபம். அவர் கனவில் இறைவன் தோன்றி, “நீ யாரை நிந்திக்கிறாயோ, அவனது பக்தியைப் பார்” என்று சொல்லிவிட்டு மறைந்தாராம். மறுநாள் அர்ச்சகரும், மறைவிலிருந்து வேடன் செய்வதையெல்லாம் பார்த்தாராம்.


தான் வேட்டையாடிய மிருகங்களை இறைவன் சன்னதியில் போட்டுவிட்டு இறைவனை வணங்கி நின்றானாம். மறைவிலிருந்து பார்த்த அர்ச்சகருக்குப் பொறுக்கவில்லை. அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. இறைவன் கண்ணிலிருந்து ரத்தம் வழியத் தொடங்கயது. வேடன் எவ்வளவோ துடைத்தும் நிற்கவில்லை. கடைசியில் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கண்ணைப் பிடுங்கியெடுத்து ஆண்டவனுக்குப் பொறுத்தி ரத்தம் வடிவதை நிறுத்தினானாம். மறு கண்ணிலிருந்து இப்போது மீண்டும் ரத்தம் வழிகிறது. இறைவன் தன்னைச் சோதிக்கிறான் என்பதைக் கூட புரிந்திராத வேடன், தனது இன்னொரு கண்ணைப் பிடுங்கத் தயாரான போது ஆண்டவனே பிரத்யக்ஷமாகத் தோன்றி அவனை ஆட்கொண்டார், என்பது தான் காளஹஸ்தியின் ஸ்தல புராணம். தன் கண்ணையே ஆண்டவனுக்குக் கொடுத்ததால், இவரும் ஒரு நாயனமாரானார். கண்ணப்ப நாயனார்.

இறைவன் பெயர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர். அம்மை ஸ்ரீமதி ஞானப்ரசூன்னாம்பிகை சமேதராக காட்சியளிக்கிறார். சுவர்ணமுகி நதிக்கரையில் கோயில் அமைந்திருக்கிறது. முத்துசுவாமி தீக்ஷிதர் கூட ஸ்ரீ காளஸ்தீஸ்வரர் மீது கீர்த்தனம் பாடியுள்ளார்.

சென்னையிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆந்திராவில் தான் காளஹஸ்தி இருக்கிறது. சென்னையிலிருந்து திருப்பதி போகும் வழியில் தடா என்ற ஊரில் இடங்கைப் பக்கம் திரும்பி இன்னும் ஒரு 60 கி.மீ தூரம் பயணித்தால் காளஹஸ்தியை அடையலாம்.


சென்னையிலேயே வெயில் பொறுக்க வில்லை, ஆந்திராவில் எப்படியருக்குமோ அதனால் 4 மணிக்கே கிளம்பிடலாம் என்று தான் முடிவு செய்தோம். ஐந்தேமுக்காலுக்குத் தான் கிளம்ப முடிந்தது. திருப்பதிக்குப் போகும் நால்வழிப்பாதையில் திருப்பதியைத் தவிர வேறெல்லா ஊரின் பெயர்களும் இருந்தன. காளஹஸ்தியை அடையும் போது 7.45. சென்னையிலிருந்து 80 கி.மீ பயணித்தாலே நிலம், மக்கள், பேருந்து எல்லாவற்றிலும் மாற்றம் தெரிந்தன. கொல்டி தேசத்தில் நுழைந்து விட்டோம் என்பதை புரியாத ஜிலேபி எழுத்துக்கள் ஊர்ஜிதப்படுத்தின.

காளஹஸ்தியின் இன்னொரு பெருமை, இது ராஹு கேது ஸ்தலம். ஸர்ப்ப தோஷம் நிவ்ருத்தி செய்வதற்கு இங்கு வந்து பூஜை செய்கிறார்கள். 250 ரூபாய் செலுத்தி, சாதாரண வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து கும்பலோடு கும்பலாக பூஜை செய்யலாம். 600 ரூபாய் கொடுத்து சிறு கோஷ்டியாக பூஜை செய்யலாம். அல்லது 1000 ரூபாய் கொடுத்து ஸ்பெஷலாக பூஜை செய்யலாம். எல்லா இடத்திலும் மந்திரம் ஒன்று தான். காத்திருக்கும் நேரம் மற்றும் மாறுபடுகிறது. பணத்திக்கேற்ப கவனிப்பு மாறுபடும். காசியிலிருந்து கூட இங்கு வந்து தோஷ நிவ்ருத்தி பூஜை செய்கிறார்கள். காலை 7, 8, 9, 10, 11 மணியென ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேட்ச் என்ற முறையில் பூஜை நடக்கிறது. அவ்வளவு கூட்டத்தையும் நன்றாகவே நிர்வாகம் செய்கிறார்கள். கோயில் பிரகாரம் முழுவதும் கூறை வேய்ந்திருக்கிறார்கள். இல்லையென்றால் வெயிலுக்கு பஸ்மமாகியிருப்போம். கண் கூசும் அளவிற்கு வெயில்.

நாங்கள் போயிருந்தது சனிக்கிழமை. விடுமுறை நாள். 9-10.30 ராகு காலம் வேறு. கூட்டமான கூட்டம். மக்கள் பக்திக்காக வருகிறார்களோ இல்லையோ,எல்லோரும் ஏதோ கோரிக்கையுடனேயே வருகிறார்கள். இறைவனை ஜில்லா கலெக்டர் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்கள். மனுவை எழுத்து மூலம் கொடுக்காமல் பிரார்த்தனையாகக் கொடுக்கிறார்கள். பெங்களூரிலுள்ள சிவன் கோயிலொன்றில் சிவனுக்குக் கடிதமே எழுதிப் போடலாம். அதற்கு இது தேவலாம்.

கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வரும் போது 12 மணியாகிவிட்டிருந்தது. பசி காதை அடைக்க ஆரம்பித்து விட்டது. சரவணபவன் என்ற போர்டைப் பார்த்த மாத்திரத்திலேயே உள்ளே போய்விட்டோம். சாப்பாடு வந்த பிறகு தான் தெரிந்தது, இது “ஹோட்டல்” சரவணபவன் இல்லை என்று. சாதம் வேகவேயில்லை. சாம்பார் என்ற பெயரில் ஏதோ செய்திருந்தார்கள். எவ்வளவு கூப்பிட்டும் டேபிளை சுத்தம் செய்யவில்லை. ரசத்தில் புளியை அரைத்து விட்டார்களா தெரியவில்லை. அப்படியும் கொடுத்த காசுக்கு நான் மட்டுமே உருப்படியாகச் சாப்பிட்டேன். காயத்ரியும் அம்மாவும் ஒழுங்காகச் சாப்பிடவில்லை. விதியை நொந்து கொண்டு கிளம்பினோம். கொடுமையென்னவென்றால் வெளியே வந்த பிறகு, இன்னொரு கோபுர வாசலில், ஒரிஜினல் ஹோட்டல் சரவணபவன். வாரியார் நக்கலாக சிரிப்பது போலிருந்தது.

வெயில் கண்ணைக் கட்டியதால் 30 படியேறி சிறு குன்றிற்கு மேலிருக்கும் கண்ணப்ப நாயனார் சன்னதிக்குப் போகவில்லை. கார் ஸ்டியரிங்கைக் கூடப் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு சூடு. தண்ணீரை காரில் வைத்திருந்த தண்ணீர் வெந்நீராக மாறியிருந்தது. கார் ஏ.சி அன்று தான் முழு வீச்சில் ஓடியது. மூன்றரை மணிக்கு வீடு திரும்பியாச்சு.

அவ்வளவு தூரம் போய்விட்டு திருப்பதிக்கும் ஒரு விசிட் அடித்திருக்கலாம். ஆனால் காளஹஸ்திக்குப் போய் விட்டு வேறெங்கும் செல்லக் கூடாது நேராக வீட்டுக்குத் தான் போகவேண்டுமாம். இது ஐதீகமா அல்லது 800 ஆண்டுகளுக்கு முன் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் நடந்த போராட்டத்தால், சைவர்கள் யாரும் திருப்பதிக்குப் போகாமலிருப்பதற்காகக் கட்டிவிடப்பட்ட கதையா தெரியவில்லை. “ஆண்டவன் தம்மி தரிசிக்க வருபவர்களுக்கு இப்படியெல்லாம் கட்டளையெல்லாம் இடவில்லை. அப்படி கண்டிஷன் போடும் கடவுள் நமக்குத் தேவையும் இல்லை” என்று காஞ்சி பராமாச்சாரியார் சொல்லிருக்கார். காயத்ரிக்கு சாமி விஷயத்தில் கேள்வி கேட்டால் பிடிக்காது. அதனால் தேமேயென்று வந்து திரும்பிவிட்டோம். (போன பதிவில் போட்ட புகைப்படத்துக்கேற்ப நடந்துக்க வேண்டாமா??)

பி.கு: இங்கு வரும் பெரும்பாலானவர்கள், ஸர்ப்ப தோஷ பூஜை செய்வதற்காகத் தான் வருவார்கள். அதனால் பூஜை செய்ய ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஏகப்பட்ட தரகர்கள் திரிகிறார்கள். சிலர் ஆந்திர அரசு அடையாள அட்டை வேறு வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் அண்டாதிருப்பது நல்லது. கியூவில் நின்று நாமே டோக்கன் பெற்றுக் கொண்டு பூஜை செய்துவிட்டு வெளியே வந்து விடலாம். எங்களோடு வந்தால், சீக்கிரமே பூஜை செய்து கொண்டு வெளியே வந்துவிடலாம், சுவாமியையும் அம்பாளையும் முதல் ஆளாக தரிசித்து விடலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள். எல்லாம் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு. எல்லோரையுமே வரிசைப் படி தான் அனுமதிக்கிறார்கள்.

April 22, 2010

என்னத்தச் சொல்ல??

ஒரு கோயிலில் கல்வெட்டாகச் செதுக்கியிருந்ததிது. ரொம்ப சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்தேன். கடைசி வரியைப் படித்தவுடன் வாயடைத்துப் போய்விட்டேன். கொடுமையென்னவென்றால் அருகில் காயத்ரியும் இருந்தது தான்.என்னத்தச் சொல்ல !! காலம் கலி காலம்!!





April 17, 2010

அளவுக்கு மீறினால் அமிர்தமும் ....

உண்ண மறுத்து உரக்கம் மறந்து ஒரு செயல் என்னால் செய்ய முடியும் என்றால், அது கிரிக்கெட் பார்ப்பது தான். அதென்னவோ, எந்த தீத்தாலாண்டி அணி விளையாடினாலும் கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கு யார் விளையாடுகிறார்கள் என்பது முக்கியமல்ல. விளையாடப்படும் கிரிக்கெட் தான் முக்கியம். ஒரு கையால் கேசரியும் மற்றொரு கையால் குலாப் ஜாமூனும் சாப்பிட்டுக் கொண்டே முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு ஜேசுதாஸ் கச்சேரி கேட்பது எவ்வளவு பெரிய பேரானந்தம். அப்படித்தான், கிரிக்கெட் பார்ப்பதும்.

எந்த ஹைதர் அலிகாலத்து மாட்ச்னாலும் சரி, டோனி க்ரெயிக், சோபர்ஸ் விளையாடிய ஆட்டங்களின் மறு ஒளிபரப்பைக் கூட விட்டு வைப்பதில்லை. பார்த்த ஆட்டங்களையே கூடத்திரும்பப் பார்ப்பதில் சலிப்பு கிடையாது. கேட்ட பாடல்களையே திரும்பக் கேட்பதில்லையா. இந்தப் பாழாப்போற கிரிக்கெட் மாட்சை எத்தனை முறை பார்ப்பது என்று காயத்ரி கேட்பதெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.

இப்படி கிரிக்கெட் பித்துப் பிடித்தவனுக்கு ஐ.பி.எல் என்ற பெயரில் தினமும் 3 மணிநேர சுறு சுறு துரு துரு கிரிக்கெட் ஆட்டங்கள், கரும்பு தின்னக் கூலி கொடுப்பது போல் தான். ஏதோ மூண்ரு மணி நேர சினிமா பார்ப்பது போல் தான். யார் ஜெயித்தாலும் ஆனந்தமில்லை, தோற்றாலும் கவலையில்லை.

முதல் சீஸனில் யார் யாரை வீழ்த்தினார்கள், யார் எவ்வளவு ரன் எடுத்தார்கள் போன்ற புள்ளி விவரங்களெல்லாம் கை விரல் நுனியில். எந்த மாட்சையும் விட்டு வைக்கவில்லை. இரண்டாவது சீஸனில் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்தது. இப்போது மூன்றாவது சீஸன் நடந்து கொண்டிருக்கிறது. சில மாட்சுகள் மட்டுமே பார்க்கிறேன். அதுவும் பிடித்த ஆட்டக்காரர்கள் அடினால் மட்டுமே. அதிலும் ஹைதராபாத் கொல்கத்தா ம்ஹூம்.

கிரிக்கெட்டை விட பணம் தான் பெரிதாக விளையாடுகிறதோ என்ற எண்ணம் சில சமயம் எழுகிறது. சச்சின் இவ்வளவு கோடி, தோனி அத்தனை கோடி, புதிதாக முளைத்திருக்கும் கொச்சி அணி 1500 கோடி. ஆக யார் எவ்வளவு ரன் எடுத்தார்கள், எவ்வளவு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள் என்பதை விட்டு விட்டு, யார் எத்தனை டாலருக்கு விலை போனார்கள் என்பது பற்றித்தான் பேச்சு.

இவ்வளவு கோடிகளில் பணம் புரளும் நாட்டிலா மனிதர்கள் பட்டினியால் வாடுகிறார்கள்? பணத்தை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பண முதலைகள் இன்னும் நிறைய பணம் செய்ய கிரிக்கெட் ஒரு சாக்கு அவ்வளவு தான். இந்தப் பண முதலைகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற ஐ.பி.எல் ஒரு நல்ல வழி. அதனால் தான் கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்கிறார்கள் போலும். இல்லையென்றால், கிரிக்கெட்டின் அரிச்சுவடி கூடத் தெரிந்திராத ப்ரீதா ஜிந்தாவுக்கும் ஷாருக்கானுக்கும் ஏன் இவ்வளவு அக்கறை?

கிரிக்கெட் உலகையே உலுக்கிய சூதாட்ட விவகாரம், இன்று லீகலைஸ் செய்யப்பட்டு விட்டது மாதிரி தான் இருக்கிறது, இந்த ஐ.பி.எல் விளையாட்டு. கோடிகளை கொட்டியிறைத்து, அணிகளை வாங்கியிருக்கும் ஃரான்சைஸிகள், தமது அணிகள் வெற்றி பெறுவதற்காகக் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

எந்தப் பக்கம் திரும்பினாலும் ஐ.பி.எல் பற்றிய விளம்பரம். எல்லா வியாபாரங்களும் ஐ.பி.எல்’ஐ ஒரு சாக்காக வைத்து பணம் செய்கிறார்கள். பிடித்த அணியின் சீறுடையா, 600 ரூபாய். ஐந்து நட்சத்திர ஹோட்டல்காரர்கள் முதல் தெரு முனை வியாபாரி வரை ஐ.பி.எல்’ஐ வைத்து பணம் பண்ணுகிறார்கள். எந்த எஃப்.எம் சானலைத்திருப்பினாலும் ஐ.பி.எல் விளம்பரம். மைதானத்தில் வீரர்களுக்கருகில் உட்கார்ந்து மாட்ச் பார்க்க வேண்டுமா, ஒரு எஸ்.எம்.எஸ் தட்டுங்கள் என்று கூவுகிறார்கள். மெய்யாகவே யாருக்காவது டிக்கெட் கிடைத்ததா, தெரியவில்லை. நமது கிரிக்கெட் ரசிப்புத்தன்மையை நன்றாகவே பயன் படுத்துகிறார்கள். இது போதாதென்று, எஸ்.எம்.எஸ் போட்டி வேறு. ஹேடன் பயன் படுத்தும் பேட்டின் பெயர் என்ன? 1. மங்கூஸ் 2. தர்பூஸ்; சரியான விடை அனுப்புபவர்களுக்கு ஹேடனுடன் சேர்ந்து மூச்சா போகலாம் என்று சொல்லாத குரையாக போட்டிகள்.

ஒவ்வொரு ஃபோருக்கும், சிக்ஸருக்கும் ஆபாச உடையணிந்த மங்கையரின் நாட்டியம். விளையாட்டு வீரர்களுடன் அமர்ந்து மாட்ச் பார்ப்பதற்கு 40000 ரூபாய். அது போக அன்றிரவு நடக்கும் பார்டிக்கும் இலவச அனுமதி. இரவு பார்ட்டியில் நவ நாகரீக மங்கைகளின் ஃபேஷன் மாடல்களின் அணிவகுப்பு. அதற்குப் பிறகு என்னென்னவோ. நடப்பது கிரிக்கெட் போட்டி தானா?

மும்பைக்காக சச்சின் விளையாடுகிறார் என்பதால், சென்னைக்கெதிராக அவர் விளாசும் ஒவ்வொரு ஃபோரும் சிக்ஸரையும் ரசிக்க முடியவில்லை. இவன் எப்போது ஒழிவான் என்று ஹேடனை வெறுத்த மனம், யப்பா ஹேடா, சென்னை மானமே உன் கையில் தானப்பா இருக்கு என்று வேண்டுகிறது. ஐய்யையோ நான் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை, என் மனம் இப்படி மாறும் என்று.

சரி யார் எவ்வளவு பணம் பண்ணினால் நமக்கென்ன? கிரிக்கெட் தானே நமக்கு முக்கியம் என்று பார்க உட்கார்ந்தால், 8 அணிகள், 60 மாட்சுகள், தினமும் இடைவிடாது கிரிக்கெட். கொஞ்சம் திகட்டத் தான் செய்கிறது. இது போட்தாதென்று அடுத்த வருடத்திலிருந்து இன்னும் இரண்டு அணிகள் களத்தில் இறங்கப் போகின்றன. 94 மாட்சுகளை. இப்பவே கண்னக் கட்டுதே என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இதோ அடுத்த வாரம் டி20 உலகக்கோப்பை ஆரம்பிக்க போகிறது. நம் வீரர்கள் ஐ.பி.எல்’இல் ஆடி ஓய்ந்து ஏற்கனவே போன வருடம் மண்ணைக் கவ்வி விட்டார்கள். இந்த வருடமும் அதே நிலைமை வராமலிருக்க வேண்டும். ஐ.பி.எல் விளையாட்டினால் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வித ஒற்றுமையில்லா நிலைமை உண்டாகிடுமோ என்ற அச்சம் உண்டாகிறது.

இந்தக் கோமாளித்தனம் போதுமே. ஏதோ மூன்றாண்டுகள் நடத்தினோம், கொஞ்சம் பணம் பார்த்தோம் என்று இந்த ஆண்டோடு இந்த கோலாகலத்தை நிறுத்திக் கொண்டால் நல்லது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள்.

“அப்பாடா, அப்போ இன்னிலேர்ந்து கிரிக்கெட் கிடையாதா. சீரியல் ஏர்டெல் சூப்பர் சிங்கரெல்லாம் பார்க்கலாம்! ஹப்பா” என்று காயத்ரி கூதூகலிக்கிறாள்.

“இல்லை இல்லை, இன்னிக்கு சென்னை அணிக்கு வாழ்வா சாவா மாட்ச். பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து விட்டால் அரை இறுதிக்குப் போய் விடலாம். நேற்று பெங்களூர் அணி தோற்றுப் போய் விட்டதால், சென்னை அணிக்கு வாய்ப்பு பிரகாசமாகிவிட்டது. + 0.270 ரன் ரேட் இருக்கு. ஒரு வெற்றி ஒரேயொரு வெற்றி தான் வேண்டும்” என்று நான் சொல்ல, சரி தான் ஏதோ நல்ல புத்தி வந்துடுத்து நான் நினைச்சது தப்புத்தான். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுத்தா என்று முகத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டாள்.

April 06, 2010

மாமியார் உடைத்தால் மண்கலம் மருமகள் உடைத்தால் வெண்கலமா??

இந்தக் கட்டுரையை எழுதும் முன், ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எந்த மத்தத்தினர் மீதும் எனக்கு எந்த விரோதமோ
துவேஷமோ இல்லை. என் கோபமெல்லாம் போலித்தனமாகப் பேசுபவர்கள் மேல் தான். இந்த விஷயங்களை மனதில் நன்றாக வாங்கிக் கொண்டு
மேலே படிக்கவும்.

“எம்.எஃப். ஹுஸைன் கதார் நாட்டு பிரஜையாகிறார்” - இது சில நாட்களுக்கு முன் வந்த செய்தி. ஹிந்துக் கடவுள்களை நிர்வாணமாக்ப் படம் வரைந்தார்
என்பதற்காக சில ஹிந்து மத அடிப்படைவாதிகள் அவர் வீட்டைத் தாக்கியது, “இந்தியாவுக்குள் காலடியெடுத்து வைத்தால் காலை வெட்டுவேன்” இப்படி
பயமுறுத்தியதெல்லாம் பழைய கதை. அவருக்கு பார்வதியையும் சரஸ்வதியையும் அந்தக் கோலத்தில் பார்க்க வேண்டுமோ, இல்லை அவர்
கண்களுக்கு மட்டுமே கலையாகத் தெரியும் நிர்வாணம் மற்றவர்களுக்கெல்லாம் அறுவறுப்பாகத் தெரிந்ததா, தெரியவில்லையா, யாம் அறியோம். ஆனால் மனிதருக்கு தொண்ணூறு வயதில் நாட்டை விட்டே ஓடிப் போகும் அளவிற்கு நெருக்கடியான நேரம். மனசுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.
“என்ன தெனாவட்டு இருந்தா இந்தால் இப்படி படம் வரைவான்” என்று கேட்பர்களுக்கு நான் சொல்வதெல்லாம், அவர் கண்களுக்குத் தெரியும் கலை நம்
போன்ற சாதாரண மனிதர்களுக்குத் தெரியவில்லையென்றால், அந்தப் பக்கம் திரும்பாமல் போக வேண்டியது தான். அதே சமயம், “எம்.எஃப். ஹுஸைனுக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும், அவரது கற்பனையை படமாக வரவதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது” என்று வாதிடுபவர்களுக்கு ஒரு கேள்வி. தஸ்லிமா நஸ்ரின் என்றொரு வங்காளதேசத்து எழுத்தாளர் இருக்கிறாரே ஞாபகம் இருக்கிறதா? அவரது சொந்த நாடு அவரை நிராகரித்த போது, இந்தியாவே கதியென்று ஓடி வந்து பிச்சையெடுக்காத குறையாக அடைக்கலம் கேட்டாரே, அப்போது எங்கய்யா போச்சு, கருத்து சுதந்திரத்துக்கு நீங்க கொடுக்கும் மரியாதை?

ஹுஸைனுக்கு சரஸ்வதியை நிர்வாணமாக வரைவதற்கு எந்தளவிற்கு உரிமை இருக்கிறதோ, அதே போல் தான் தஸ்லீமாவுக்கும் தன் மனதில் பட்டதை எழுத்துருவில் தனது கருத்துக்களை, அது விமர்சனமாக இருந்தாலும் சொல்வதற்கு, சுதந்திரம் இருக்கிறது. அவர் எழுதிய லஜ்ஜா என்ற
புத்தகத்தைப் படித்திருக்கிறேன். பங்களாதேசத்தில் ஹிந்துக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை கண் முன்னே நிறுத்தும் புத்தகம். மதம்
என்ற பெயரால் அங்கு நடந்த இனப் படுகொலையின் சாட்சி. சொந்த நாடு, வீடு மக்கள் என அனைத்தும் துறந்து நடுத்தெருவில் கொலை கற்பழிப்பு
செய்யப்பட்ட லக்ஷோபலக்ஷம் மக்களின் ஓலக்குரல்களின் எதிரொலி.

இங்கே பெரியார் எப்படி ஹிந்து மத்திலுள்ள குறைகளை களைய முற்பட்டாரோ, அதே போல், இஸ்லாத்திலுள்ள குறைகளை எடுத்துக்கூறி கட்டுரைகள்
பல எழுதினார் தஸ்லீமா. இதற்காக அவருக்குக் கிடைத்தது என்ன? அவரைத் தூக்கிலிட வேண்டும் என்று இஸ்லாமிய மதத் தலைவர்களின் குமுறல்.
அவர் எழுதிய கருத்துககள் எடுத்து வைத்த வாதங்கள் சரி தவறு என்று சொல்லவில்லை. ஆனால், தன கருத்தை முன் நிறுத்தியதற்காக அவருக்குக்
கிடைத்தென்னவோ, நாட்டை விட்டே ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

எம். எஃப். ஹுஸைனுக்குப் பாதுகாப்பு வழ்ங்க முடியவில்லையே என்று வருந்தும் காங்கிரஸ் அரசு, அடைக்கலம் வேண்டி மண்றாடிய தஸ்லீமாவுக்காக ஏன் பரிந்துகொண்டு வரவில்லை? அவர் மீது ஆந்திராவில் வன்முறை நடந்தது. இரு சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை மிரட்டும் புகைப்படங்கள் பல பத்திரிகைகளின் முன் பக்கத்தில் வந்தன. ஆனால், அவர்கள் மேல் ஒரு வழக்காவது பதிவானதா, தெரியவில்லை. இந்தியாவே கதி என்று நம்பி வந்தவரை, இந்த அரசு என்ன செய்தது? எங்கேயேன் போ, எக்கேடு கெட்டுப் போ ஆனால் இங்கே இருக்காதே என்று துரத்தி விட்டது. சரி, தஸ்லீமாவிற்குப் பாதுகாப்பு கொடுப்பது கஷ்டம். அவர் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது. அதனால், அவர் உயிர் மீது இருந்த கரிசனத்தாலேயே அவர் இந்தியாவில் இருப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று சொன்னாலும் சொல்லும் இந்த அரசாங்கம்.

ஹுஸைன் வெளிப்படுத்தும் கற்பனையான சுதந்திரத்துக்கு சொம்பு தூக்கும் அரசு, தஸ்லீமா போன்ற எழுத்தாளர்கள் உண்மையை வெளிப்படுத்த அவருக்கு சுதந்திரம் இல்லையா?

அட, இந்த கேடு கெட்ட அரசாங்கம் தான் கண்டு கொள்ளவில்லை, காலணா காசு பிரயோசனமில்லாத சானியா மிர்சாவைக் கவர் பண்ணும் தொலைக்காட்சியும் பத்திரிகைகளும் கூடக் கண்டுகொள்லவில்லை. பிளாகோஸ்ஃபியரில் கூட அது பற்றி ஒரு கட்டுரை வந்ததா, தெரியவில்ல. ஏன் தஸ்லீமா விமர்சித்தது, இஸ்லாம் மத்தத்தை என்பதலா? இல்லை, அவர் அயல் நாட்டவர். அவரை ஆதரித்து உள்ளூர் முல்லாக்களை பகைத்துக் கொள்வானேன் என்ற எண்ணத்தினாலா? அதனால் ஐந்தாறு தீவிரவாதி உண்டு பண்ணுவானேன் என்ற நாட்டுபற்றினாலா?

அப்படி மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஒரு அரசு எண்ணினால், எல்லா மக்களுக்கும் ஒரே அளவுகோலைக் கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலரிடம், “உங்கள் நம்பிக்கைகள் எந்த விதத்திலும் புண் பட விட மாட்டோம்” என்றும் இன்னொருத்தரிடம், “உங்கள் நம்பிக்கை என்னவானால் எனக்கென்ன” என்று இருப்பதும், தமிழிலுள்ள பழமொழியைத் தான் ஞாபகப் படுத்துகிறது.

“மாமியார் உடைத்தால் அது மண்கலம், மருமகள் உடைத்தால் வெண்கலம்”

மீண்டும் சொல்கிறேன். நான் தஸ்லீமாவின் கருத்துக்களை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஹிபோக்ரடிக்காக போலித்தனத்துடன் நடந்து கொள்ளும் அரசும் ஊடகங்கள் மீதும் தான் என் கோபமெல்லாம். தஸ்லீமா மீது எனக்கு பரிவும் இல்லை, ஹுஸைன் மீது கோபமும் இல்லை. இவர்கள் எழுதியதையும் வரைந்ததையும் பார்த்து என் எண்ணங்களும் நம்பிக்கைகளும் செண்டிமெண்டுகளும் மாறப்போவதில்லை.

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது, தஸ்லீமாவின் இணையதளத்தின் அவர் பட்ட இன்னல்கள் பற்றிப் படிக்க நேர்ந்தது. அதுவே இப்பதிவை எழுதக் காரணம்.