Pages

February 09, 2010

சென்னை 101

லகம் சிறியது. வாழ்க்கை அதை விடச் சிறியது. ஒன்பதாண்டுகள் பெங்களூரிலேயே குப்பை கொட்டிவிட்டதனால், வேறொரு இடம் போகலாம் என்ற எண்ணம் எழ, சிந்தையில் முதலில் தோன்றிய இடம், சிங்காரச் சென்னை. சாமான் செட்டையெல்லாம் அள்ளிக்கொண்டு சென்னையில் டெண்டடித்து இன்றோடு 25 நாட்களாகிவிட்டன.

கல்லூரி முடித்து, எதிர்காலம் தேடி முதன் முதலில் கால் பதித்த திருத்தலம், சிங்காரச் சென்னை. அப்படித்தான் சென்னை அன்று அழைக்கப் பெற்றது. சிறிய ஊரிலிருந்து வந்ததாலென்னவோ எந்தக் கட்டிடத்தைப் பார்த்தாலும் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் பார்த்த நாட்கள். இப்போது மீண்டும் சென்னையைக் காணும் போது, வேறு விதமான் உணர்வுகள், எண்ணங்கள்.

வீடு, தெரு, அலுவலகம்என்று சகல இடங்களிலம் ஒரு விதமான கலாச்சார மாற்றம். முதலில் மெட்ராஸ் தமிழுக்குப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மரியாதை என்பது இம்மியளவும் இல்லாத தமிழ். நம்மோடு ஆண்டாண்டு காலமாகப் பழ்கியவர்கள் போல் ஒருமையில் தான் எல்லோரும் பேசுகிறார்கள். தமிழிலக்கணத்தில் பன்மையே படித்திராதவர்கள் போல. வீட்டில் வேலைக்கு வரும் அக்கா, பஸ் கண்டக்டர், தண்ணீர் கொண்டு வரும் பையன், ஆட்டோ டிரைவர்கள் இப்படி எவருக்கும், மரியாதையாகப் பேசத் தெரியவில்லை. ஊரில் யாராவது இப்படி மரியாதையில்லாமல் பேசியிருந்தால், லெஃடுலயே கொடுத்துவிடுவார்கள்.

இந்நாள் வரை ஆஃபீசில் ஆங்கிலத்தில் தான் பேசுவது வழக்கம்.சில நேரம் ஹிந்தி. தண்ணீர் கொடுக்மறுப்பதாலோ என்னவோ, கன்னடத்தில் கடைசி வரை மாத்தாடவேயில்லை. இங்கே எல்லோரும் எப்போதும் தமிழ் தான். சுற்றுமுற்றிலும் அனைவரும் தமிழிலேயே பேசுவது கொஞ்சம் Odd'ஆகத்தான் இருக்கிறது. அட, யாரையும் அவருக்குத்தெரியாமல் தமிழில் கலாய்க்கக் கூட முடிவதில்லை. வடநாட்டவர் ஒரு சிலர் கூட முட்டி மோதி தமிழ் பேசுகிறார்கள். பாவம், It is a matter of survival for them.

டீம் மீடிங் முதற்கொண்டு எல்லாமே தமிழ் தான். வெள்ளைக்காரர்களுக்காவது ஆங்கிலத்தில் மெயில் அடிப்பார்களா தெரியவில்லை! ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் தமிழிலேயே தான் பதில். அவ்வப்போது இது தமிழ் நாடு என்ற என்ற எண்ணமே மறந்துவிடுகிறது.

சென்னையை Intellectual Capital of India என்றும் சொல்வார்கள். எனக்கென்னவோ, சீக்கிரமே, சென்னை, Garbage Capital of India என்றாகிவிடும் போலிருக்கிறது. தெருவுக்குதெரு குப்பைத் தொட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் அதைத் தவிர வேறு எல்லா இடத்திலும். குப்பை கொட்டுகிறார்கள். கேட்பார் யாரும் இல்லை. கிட்டத்தட்ட எல்லோரும் எச்சில் உமிழ்கிறார்கள்.

எங்கு திரும்பினாலும், கருணாநிதி ஸ்டாலின் ஜெயலலிதா, இது போதாதென்று விஜய்காந்த் திருமா போன்றவர்களின் ஃபோடோக்கள் வேறு. இந்த மொகரைக் கட்டைகளைப் பார்க்காமல் நூறடி கூட கடக்க முடியாது. அரசியல் வாசகங்கள் இல்லாத சுவரே கிடையாது. அவர் அழைக்கிறார் இவர் அழைக்கிறார் என்று வாசகங்கள் வேறு. எங்கே அழைக்கிறார், எதற்காக அழைக்கிறார், கடவுளுக்கே வெளிச்சம்.

இது போதாதென்று விஜய் அஜீத் சரத் குமார், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான கார்த்திக், சிபிராஜ் வரை எல்லோருக்கும் ரசிகர் மன்றங்கள். தமிழர்கள் மாதிரி யாராலுமே தனி நபர் முகழ் ட முடியாது போலிருக்கு.

எக்கச்செக்க எஃப் எம் சானல்கள். ஒரு சானல் பிடிக்காவிட்டால், இன்னொன்றுக்குத் திருப்பிடலாம். ஏதாவதொன்றில் நல்ல பாட்டு போடுவார்கள் என்பது உத்தரவாதம். பெங்களூர் மாதிரி ஒரே சானல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய சாபம் இல்லை.

யார் என்ன பாடினாலும் மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எப்போதும் ஏதாவதொரு சபாவில் கச்சேரி அல்லது கதா காலக்ஷேபம். தென்னிந்தியாவின் பாரம்பரிய சங்கீதம் சென்னையில் மட்டுமே உயிரோடிருக்கிறது என்று எண்ணத்தோன்றுகிறது. நெல்லை சங்கீத சபாவில் ஒரு முறை பால முரளி கிருஷ்ணா கச்சேரி. அனுமதி இலவசம் என்று போட்ட பிறகும், 10 வரிசைக்கு மேல் ஆளில்லை.

பெங்களூரில் விபூதி இட்டிருந்தாலே தமிழன் என்று முடிவு கட்டிடலாம். சென்னையில் நிறைய பேர் பட்டை பட்டையாக விபூதி இட்டுக் கொள்கிறார்கள். மக்களின் பக்தி, பிரவாகமெடுத்துத் தான் ஓடுகிறது. நிறையக் கோயில்களில், தினமும் பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, அக்காரவடசல் என்று அமர்க்களப்படுகிறது. பாய்ஸ் படத்தில் செந்தில் சொன்னது முற்றிலும் மெய். கோயில் பிரசாதம் வாங்கியே வயிற்றை ரொப்பி விடலாம். இது போதாதென்று, ஹனுமத் ஜெயந்தி, ராம நவமி, சிவராத்திரி போன்ற தினங்களில் அன்னதானம் வேறு. அரிசி பருப்பு விற்கும் விலையில் பாதி நாள் கோயிலிலேயே சாப்பிடலாம் என்று காயத்ரியிடம் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

போக்குவரத்து சிஸ்டம் ரொம்ப நன்றாக இருக்கிறது. ஆனால் மக்களுக்குத்தான் இதை உணர்ந்து ஓட்டும் தன்மை இல்லை. நடைபாதையெங்கும், கடை விரித்திருக்கிறார்கள். இதைக் கேட்பாரில்லை. மக்கள் ரோட்டில் தான் நடக்கிறார்கள். சென்னை ரோடுகளில் கார் ஒட்ட வேண்டுமென்றால், மீண்டும் டிரைவிங் கற்றுக் கொள்ள வேண்டும். பெங்களூரில் டிரைவிங் ஒழுங்காக இருக்கும், சிஸ்டம் ஒழுங்கா இல்லை. இங்கே சிஸ்டம் ஒழுங்கா இருக்கு, மக்களிடம் ஓட்டுவதில் ஒழுக்கமில்லை. இந்தளவு போக்குவரத்து நெரிசல் பெங்களூரில் இருந்தால், ஊரே ஸ்தம்பித்து விடும். வீட்டிலிருந்து அலுவலகம் 16 கி.மீ இருந்தாலும் 40 நிமிடங்களில் போய்விடுகிறேன்.

முக்கியமானதொரு விஷயம், சென்னையில் பெரும்பாலும் சுடிதார் சுந்தரிகளாகத்தான் திரிகிறார்கள். ஜீன்ஸ் ஜிகினாக்களையும் மிடி மைனாக்களும் தேட வேண்டியிருக்கிறது. அண்களும் பெண்களும் தனித்தனியாகத்தான் கேண்டினுக்கோ பேண்ட்ரிக்கோ போய்வருகிறார்கள்.

என்னடா இவன், பெங்களூரிலிந்து சென்னை வந்து, ஒரு விஷயம் பற்றி இன்னும் சொல்லவே இல்லையே என்று எண்ணுகிறீர்களா? சென்னை வெயில் தானே அது? நம்பினால் நம்ப்ங்கள். சென்னை குளிர்கிறது. இரவில் போர்வையால் போற்றிக் கொள்ளாமல் தூங்க முடிவதில்லை. சென்னையி்லே ஆதவன் இன்னும் ஆர்பரிக்க ஆரம்பிக்கவில்லை.

தெரிந்த மொழி, அறிந்த கலாசாரம் என்றாலும், சென்னையைப் பற்றிய அறிதலும் புரிதலும் நிதமும் தொடர்கிறது.

டிஸ்கி: சென்னையிலும் பெங்களூரிலும் நான் பார்த்தது / பார்ப்பது, இந்த இரு ஊர்களுக்குமுள்ள கலாச்சார வித்தியாசங்கள் தானே தவிர, இந்த ஊர் நல்லாயிருக்கு, இந்த மோசமாயிருக்கு என்று சொல்ல வரவில்லை.