என்ன தான் அமெரிக்க அரசியல்வாதிகள் குள்ள நரித்தனத்தோடு செயல் பட்டாலும், சில விஷயங்களை அவர்களிடமிருந்து நம்மூர் அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளலாம்:
தேர்தலுக்கு முன் என்ன தான் அடித்துக் கொண்டாலும், தேர்தலில் ஒருவரது வெற்றியை தோற்றவர் ஒப்புக்கொண்டு வாழ்த்துதல்.
நம்மூரில் நடப்பதென்ன? இவன் மக்களுக்கு பணம் கொடுத்து ஜெயிச்சுட்டான். தேர்தல் இயந்திரத்தில் கோளாறு. இவன் ஜெயிச்சது செல்லாது. ஜனநாயக முறையில் தேர்தல் நடக்கலை. பணநாயகம் தான் ஜெயித்திருக்கிறது. அப்படி இப்படின்னு அறிக்கை விடாமல், மற்றவறது வெற்றியை ஒப்புக் கொண்டு, வெற்றி பெற்றவர் மக்கள் பணியாற்றுவதில் உதவி செய்ய வேண்டும்.
"If you can't accept defeat, you have no rights to celebrate victory" என்று யாரோ சொன்னது ஞாபகம். யாரும் சொல்லாட்டாலும் பரவாயில்லை, நான் சொன்னதாகவே வச்சுக்கலாம்.
எந்த ஒரு அரசியல் பதவியிலும் இரண்டு தடவைக்கு மேல் இருக்கலாகாது
இந்தியத் திருநாட்டில் மட்டும் தான், அரசியல் வாதிகளுக்கு ரிடையர்மெண்ட் கிடையாது. உயிருள்ள வரை பதவியிலிருக்கலாம். ஒருவர் மூத்த பதவியிலிருந்து தானாக விலக வேண்டுமென்றால், ஒன்று அவருக்கு உடல் ஆரோக்கியம் கை கொடுக்காமலிருக்க வேண்டும். நம்ம வாஜ்பாய் தாத்தா மாதிரி. அல்லது மக்கள் மத்தியிலும் கட்சியிலும் செல்வாக்கு குறைய வேண்டும். வி.பி.சிங் மாதிரி. இவ்விரண்டும் இல்லையென்றால், ஜ்யோதி பாசு, கருணாநிதி போல் 4-5 தடவை ஒரே பதவியிலிருந்து அடுத்தவர்களுக்கு வழி விடாமலிருப்பது கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும். ஒரே ஆள் மீண்டும் பதவிக்கு வருவதை மக்கள் தான் தடுக்க வேண்டும்.
யார் நாட்டை ஆளப் போகிறார்கள் என்பதை முன்பே சொல்லிவிடுவது நல்லது
நம் நாட்டில் தான் (அதுவும் காங்கிரஸ் கட்சியில் மட்டும் தான்) மக்கள் தேர்தலுக்குப் போகும் போது, இந்தக் கட்சி ஜெயித்தால் யார் நாட்டை ஆளப் போகிறார்கள் என்று தெரியாமல் சமீப காலமாக ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1989’ல் வி.பி.சிங்குக்கும் சந்திர சேகருக்கும் இடையே போட்டி. யார் பிரதமராவதென்று? 2004’ல் சொல்லவே வேண்டாம். மன்மோஹன் சிங்கே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார், தாம் பிரதம மந்திரி ஆவோம் என்று. மற்ற மாநிலங்களின் சட்ட மன்றத் தேர்தலிலும் இந்தக் குளறுபடி நடந்த வண்ணமே இருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஜெயித்தால் யார் முதல் மந்திரி ஆவார்கள் என்றே தெரியாததால் மக்கள் பி.ஜெ.பி’க்கு ஓட்டுப் போட்டார்கள். "A known devil is better than an Unknown Angel" என்று மக்கள் நினைத்தார்களாவெனத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீரில் நேஷனல் கான்ஃபரன்ஸுக்குள்ளேயே குழப்பம், ஃபரூக் அப்துல்லாவா, அவரது மகனா என்று. இப்படியிருக்க மக்களுக்கெப்படி நம்பிகை வரும். அதனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இவர் தான் பிரதம/முதல் மந்திரி ஆவார் என்று முன் கூட்டியே சொல்லிவிடுவது நல்லது.
பதவியேற்பு விழாவை பொது மக்களிடையே நடத்துவது
எனக்குத் தெரிந்து 1990’ல் சந்திர சேகர் மட்டுமே வெட்ட வெளியில் பதவியேற்றுக் கொண்டார். ஒருவர் நாட்டின் தலைவராகப் பதவியேற்பதை ஏன் ராஷ்டிரபதி பவனிலும் ஆளுநர் மாளிகையிலும் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இவர்களை இந்தப் பதவியில் மக்கள் தானே? அப்படிப் பட்ட மக்களுக்கு மத்தியிலல்லவா இவர்கள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு அது இதுவென்று சொல்வதெல்லாம் வெறும் சால்ஜாப்பு. After all, A Democracy is at least by the people, if not for and of the people, right?
நான் இந்த ஜாதிக் காரன், அந்த ஜாதிக் காரன் என்று சலுகைகள் பெற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும்
ஒபாமா, அமெரிக்காவின் முதல் கறுப்பு ஜனாதிபதி, என்று இந்தியாவின் ஊடகங்கள் தவிர வேறெந்த ஊடகங்களும் சொல்ல வில்லை. ஒபாமாவும் தனது தேர்தல் பிரசாரத்தில், நான் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன், தாழ்த்தப்பட்டவன்; அதனால் ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லவில்லை. ரொம்ப கண்ணியமாக நடந்து கொண்டார். ஆனால், நம் நாட்டில், “நான் தாழ்த்தப்பட்ட ஜாதிக் காரன். அதனால் ஓட்டுப் போடுங்கள்” என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். அரசியல்வாதிகளெல்லாருமே ஒரே ஜாதி தான். ஏமாற்றும் ஜாதி. அவர்களை யாரும் எந்த விதத்திலும் தாழ்த்தி விட வில்லை. அவர்கள் தான் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்.
நம் நாட்டு அரசியல்வாதிகள் தங்களது நடத்தையை எவ்வளவோ மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கு. ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கேன். என் வீட்டுக்கு ஆடோ சூமோ ஏதும் வராதிருந்தால் நல்லது.
India could still be the largest democracy, in terms of the number of who don't vote.