ஏப்ரல் மாதம் என்றாலே இரண்டு ஸ்வாரஸ்யமான விஷயங்கள். ஒன்று முட்டாள்கள் தினம், இன்னொன்று ஸ்கூலில் விடுமுறை விட்டு விடுவார்கள். பள்ளியின் இறுதி நாளன்றே ஒரு தினுசாகத்தான் வீட்டுக்குள் வருவேன். வாசலிலேயே ஷூ சாக்ஸஸை அவிழ்த்து வீசி எரிந்து விட்டு, விளையாட ஓடி விடுவேன். பள்ளி இறுதியாண்டு பரீட்சையில் ஒரு சௌகர்யம் என்னவென்றால், எந்தெந்த பாடங்களில் எவ்வளவு மார்க் வாங்கினேன் என்று தெரியாது. யார் முதல் ரேங்க், என் ரேங்க் என்ன, எதுவும் தெரியாது. அதனால் அம்மாவிடம், வினாத்தாளிலுள்ளவற்றுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்காது. (அப்படியும் சில சமயம் அம்மா, ஏதாவது CID வேலை பார்த்து என் மர்க்கைக்கண்டு பிடித்து, என்னைப் போட்டு வதைப்பதுண்டு)
எங்கள் ஊர் வெயிலுக்கு பெயர் போன ஊர். வருஷத்திலுள்ள அனைத்து மாதங்களிலும் எங்கள் ஊர் மீது ஆதவனின் பார்வை உக்கிரமாகவே இருக்கும். கோடை விடுமுறையில் பெரும்பாலும் என் தாத்தா ஊருக்குச் சென்றுவிடுவோம். அங்கு சென்று விட்டால், என்னை கையிலே பிடிக்க முடியாது. அம்மாவின் ஜம்பமும் அங்கு பலிக்காது. தாத்தா முன் என்னைத் திட்டினால் அவருக்குக் கோபம் வந்து விடும்.
எப்போதும் நண்பர்கள் படை சூழ பேட்டும் பாலுமாகத் தான் திரிவோம்.
சாப்பிடுவதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே வீட்டிற்கு வருவேன். காலையிலே குளிப்பதற்கு ஆற்றிற்குச் சென்றால், திரும்பி வருவதற்கு 11 மணியாகிவிடும். வரும்போதே குளித்தது போக, களைத்துத்தான் திரும்பி வருவோம். அதிலும், எங்கள் நண்பர்கள் பட்டாளத்தில் எல்லோருமே சற்று கறுத்த நிறமுடையவர்கள். திரும்பி வந்த பத்தாவது நிமிடம், மீண்டும் விளையாட ஓடி விடுவேன். விளையாட்டென்றால், வீட்டில் அமர்ந்தபடி சீட்டோ, கேரம் போர்டோ அல்ல. எப்போதுமே கோடை காலங்களில் கிரிக்கெட் தான். அதுவும் பெரும் பாலும் ஏனைய தெருக்களின் டீம்களொடு மேட்ச். கொளுத்தும் மத்தியான நேர வெயிலில் தான் எங்கள் மேட்ச் ஆரம்பமாகும். தினமும் தெரு டீமோடு மேட்ச் இருக்கும்.
தாத்தாவிற்கு நான் வெயிலிலே விளையாடப் போவது பிடிக்காது. இருந்தாலும் திட்ட மாட்டார். "கோந்தே இந்த வெயில்ல விளையாடப்போகவேண்டாம். சாயங்காலமா போகலாம்" என்பார். பாட்டிக்கு என் மேல் இன்னும் வாஞ்சை அதிகம். "இந்த வெயில்ல வெளியில போனா கறுத்துப் போயிடுவே!!" என்பாள். அப்படியும் எல்லோர் கண்ணிலும் மண்ணைத்தூவி விட்டு நான் வெளியிலே ஓடிவிடுவேன். அந்த நாட்களில் வெயில் ஒன்று இருக்கிறதா என்றே நான் நினைத்ததில்லை.
வெயிலிலே அலைந்து திரிந்து வரும் என்னை என் அம்மா கறி வண்டிச்சூலன் என்று அழைப்பாள்.
வெயில் எனக்கு ஒரு தோழன் போல், என் கூடவே இருந்திக்கிறான். இந்நாள் வரை, என்னையோ என் நண்பர்கள் பட்டாளத்தையோ ஒன்றுமே செய்ததில்லை. நாங்கள் எல்லோருமே வெயிலோடு கிட்டத்தட்ட உறவாடி வளர்ந்திருக்கிறோம்.
வெயில் என்ற ஒன்று கூடவே இருந்தும், அதைப் பற்றி சட்டை செய்யாமல் வளர்ந்த நான், திரவியம் தேடி பெண்களுர் வந்த பிறகு, முகிலினங்களின் போர்வையை நீக்கி, ஆதவன் சற்றே கண் சிமிட்டினால் கூட, அலுவலகத்தின் குளிர்சாதன அறையிலிருந்தவாறே, "அப்பப்பா, என்ன வெயில!! எப்படித்தான் மக்கள் இந்த வெயிலில் வெளியில் செல்கிறார்களோ??" என அங்கலாய்க்கிறேன்.