Pages

November 02, 2005

கடவுளின் சொந்த ஊர்

"என்னப்பா, ஆவணி அவிட்டம் விநாயகர் சதுர்த்தி நவராத்திரின்னு ஒரே திருவிழா ஸ்பெஷலாவே இருக்கே, அடுத்து என்ன தீபாவளி பற்றி எழுதப் போறியா"ன்னு நண்பர் ஒருவர் எந்த வேளையில் கேட்டுத் தொலைத்தாரோ, இப்போது நான் எழுதிக்கொண்டிருப்பது தீபாவளி பற்றிய வலைப்பதிவு தான். இந்த வருஷம் நமக்கு தலை தீபாவளி வேறு. அதனால் இந்த வருடம் தீபாவளியை நான் கழித்தது என் மனைவியின் சொந்த ஊரான ஆலப்புழையில். கேரளாவில் தீபாவளி அவ்வளவு விமர்சையாகக் கொண்டாடுவது இல்லை. வெடிச் சத்தமே கேட்கவில்லை. மருந்துக்கூட ஒரு வெடிக்கடை கூட இல்லை. ஆஷியாநெட்டில் ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி கூட கிடையாது. :(
இப்படி இருக்க இந்த தீபாவளியை எப்படி விமர்சையாகக் கொண்டாடுவது என்று ஆலோசிக்கலானேன். சரி எல்லோரையும் கூட்டிக்கொண்டு எங்காவது சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.
பெண் பார்க்கச் சென்ற தினத்தன்றே இந்த ஊரை கிழக்குலகின் வெனிஸ் என்று சொன்னார்கள். (உண்மை வெனிஸை இவர்கள் பார்த்திருக்கிறார்களா என்று தெரியாது) ஊருக்குள்ளே ஏகப்பட்ட கால்வாய்க்கள் இருக்கிறதென்றும், மக்கள் படகுகளை போக்குவரத்து சாதனமாக பயன் படுத்துவார்கள் என்றும் கேள்விபட்டேன்.இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது.

இதற்கு முன் ஆலப்புழை சென்ற போதெல்லாம் எங்குமே செல்லாமல் திரும்பி வந்து விட நேரிட்டது. ஒரிரண்டு கோவிலகளுக்கு மட்டும் சென்று விட்டு, வேறெங்கும் என்னை அழைத்துச் செல்ல வில்லை என் மனைவியானப் பட்டவள். அவளுக்கு இந்த கால்வாய்களையும் படகுகளையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போய்விட்டதாம். (எனக்கு இருட்டுக் கடை அல்வா பழகி விட்டதைப் போல்)
ஆனால் இம்முறை பிடிவாதமாக படகுச் சவாரி செய்தே ஆக வேண்டும் என்று தீர்மானம் செய்து விட்டேன். என மனைவியின் கஸின்களை அழைத்துக் கொண்டு படகுச் சவாரிக்கு ஆயத்தமானோம்.
நல்ல வேளை அன்று வானிலையும் ஒத்துழைத்தது. முந்தைய தினம் மழை. தீபாவளி அன்று மழை ஏதும் பெய்யாமல் ஆதவன் மேகங்கள் படை சூழ வானிலே வட்டமிட்டான். அதனால் அவனது தாக்கமும் அதிகமில்லமல் we had a perfect day and weather for boating.

படகுத் துறையிலிருந்து படகு மெல்ல மெல்ல கால்வாயை கிழித்துக் கொண்டு புறப்பட்டது. (என்னவோ டைடானிக் நகருது மாதிரி சொல்லொதியேன்னு கேக்குறீயேளா??) இரு புறமும் அடர்த்தியாக தென்னை மரங்கள். அந்தக் காட்சியே மிக ரம்மியமாக இருந்தது.
போகும் வழியில் ஏகப்பட்ட படகுகள். இல்லை இல்லை இவற்றை படகு வீடுகள் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு படகுக்குள்ளும் ஒரு நட்சத்திர ஹோட்டல் போன்ற வசதிகள் இருக்கின்றன. உள்ளேயே ஒரு ஹோட்டல் அறை போன்ற வசதியை செய்திருக்கிறார்கள். இதற்குள்ளேயே சில திங்கள் தங்கலாம். குடும்பத்தோடு விடுமுறையைக் கழிக்க ஒரு நல்ல வழி.

கால்வாயைத் தாண்டி படகு காயலுக்குள் சென்றது. அதுவரையில் முப்பதடி அகலம் கொண்ட கால்வாய், திடீரென ஒரு கடல் போல் காட்சியளித்தது. அக்கறையைக் காணவே இல்லை. எல்லாம் ஒரே நீல நிறம். சிறுசிறு படகுகள் ஆங்காங்கே காட்சியளித்தன. ஆஹா அந்த காட்சியை வர்ணிக்க வைரமுத்துவைத் தான் அழைத்து வர வேண்டும். நிறைய புகைப்படங்களை கிளிக்கித் தள்ளினேன். (டிஜிடல் கேமராவில் அதுவொரு வசதி. வேண்டாததை அழித்து விடலாம்).

இந்த ரம்மியமயமான காட்சியைப் பார்க்து விட்டுத் தான்,

கேரள நாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
என்று பாரதி பாடினார் போல.

சரி அவர் அடந்த மகிழ்ச்சி நாமும் ஏன் அடையக்கூடாது என்று, நாங்கள் அந்தாக்ஷரி எல்லாம் விளையாடினோம். இரண்டு மணி நேரம் கழிந்ததே தெரிய வில்லை. திபாவளியன்று ஒரு வெடி கூட பற்ற வைக்காவிட்டாலும் இப்படி ஒரு படகுச் சவாரி செய்தது மிகவும் இனிமையாய் இருந்தது.
இப்போது புரிகிறது கேரளத்தை கடவுளின் சொந்த ஊர் என்று ஏன் சொல்கிறார்கள். இவ்வளவு எழில் மிகு ஊரில் கடவுள் கண்டிப்பாக வாசம் செய்கிறார்.

நண்பன் ஒருவன், திருமணத்திற்குப் பின் தனது தேன் நிலவை ஆலப்புழையில் கழிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளன். இந்த வலைப் பதிவை படித்துவிட்டு, அடுத்த வாரமே தேன் நிலவுக்குச் சென்றால் கூட ஆச்சர்யமில்லை. :)