Pages

September 16, 2005

கன்னி சமையல் அனுபவம்

"நாம அலைஞ்சு திரிஞ்சு ஒழைச்சு சம்பாதிக்கறது எதுக்கு?இந்த ஒரு ஜாண் வயித்த நிறப்பத் தானே" என்று பாய்ஸ் படத்தில் செந்தில் ஒரு டயலாக் பேசுவார். நிறைய பேர் இதை கவனித்திருக்க முடியாது. ஆனால் எவ்வளவு பெரிய தத்துவம். இவ்வளவு அசால்ட்டா சொல்லிட்டாரே. சரி சமையல் பற்றி தலைப்பை கொடுத்துவிட்டு என்னென்னமோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வயிற்றை நிறப்புவதற்கு சாப்பாடு அவசியம். அதை நன்றாகச் சமைத்தல் இன்னும் அவசியம். அப்பாடா, ஒரு வழியா கொடுத்த தலைப்புக்கு ஒரு மாதிரி சம்பந்தம் இருக்கற மாதிரி வந்துடுத்து ;-) சிறு வயதில் அம்மா என்ன சமைத்தாலும் அது பிடிக்காது இது பிடிக்காது என்று அநியாயத்துக்கு அடம் பிடிப்பேன். (ஒக்காத்தி வச்சு அம்மா அதுக்கப்புறம் வாயில திணித்ததெல்லாம் தனி கதை). "என் சமையலை பிடிக்கலைன்னு சொல்லற பாத்தியா! ஒரு நாள் நாக்கு வெண்டிப் போய் (நாக்கு செத்து போய்) என் கால்ல வந்து விழறியா இல்லையான்னு பாரு" என்று சொல்லுவாள்.
வேலை நிமித்தமாக கொல்கொத்தா செல்லும் வரை சாப்பாட்டிற்கு என்றுமே கஷ்டப்பட்டதுகிடையாது. அங்கு சென்ற பின் நிஜமாகவே சாப்பட்டுக்கு லாட்டரி அடித்துள்ளேன். அது வரை சமையலில் அ ஆ கூட தெரியாது. (ஆனா ஆவன்னான்னு படிக்கணௌம்;-)) வென்னீர் போடத் தெரியும். அவ்வளவு தான். அங்கு எல்லா ஹோட்டலும் அசைவம் தான். வேறு வழியில்லாமல் ஒரு சமையல் காரனை அமைத்திருந்தோம். ஒரு நாள் அவன் சொந்த ஊருக்கு போய் விட்டான். சரி இங்குள்ள ஹோட்டலில் சாப்பிட்டால் வேலைக்காகாது என்று தோன்றியதால் நானும் என் நண்பனும் இன்று நாமே சமைப்போம் என்ற முடிவிற்கு வந்தோம். அதுவரை அடுப்பாங்கரை பக்கம் எட்டிக்கூட பர்த்ததில்லை. சரி என்ன தான் இருக்கு பார்ப்போம் என்று முதலில் நோட்டமிட்டோ ம். உருளைக்கிழங்கும் வெங்கயமும், மற்ற சில பொடிகளும் இருந்தன. stove cooker எல்லாமே கூட இருந்தது. அரிசி மட்டும் இல்லை. நண்பன் அரைக்கிலோ அரிசி வாங்கி வந்தான். அதுவும் விலையுயர்ந்த basmati அரிசி. இதற்கு முன்னால் சமைத்த அனுபவம் என்ன, சமையல் செய்வதை பார்த்த அனுபவம் கூட கிடையாது. அரிசியை எப்படி களைய வேண்டும், எவ்வள்வு தண்ணீர் வேண்டும், ஒன்றுமே தெரியவில்லை. சரி நமக்கு ஒன்றும் தெரியாது என்று காட்டிக்கொள்ளக்கூடாது என்று என் மனசாட்சி கண்டிப்பான கட்டளையிட்டதால் கம்மென்று இருந்துவிட்டேன்.

நண்பன் முதலில் அரிசியை கழுவினான். அம்மா அரிசியை களைவதை பார்த்திருக்கிறேன். இவன் என்னவோ வித்தியாசமாக கழுவுவதை பார்த்து, "டேய் அரிசியை களைய மாட்டாயா. அப்படியே போடுறியே" என்றேன். அவன் தனது பாலக்காட்டுத் தமிழில் (இதை கொஞ்சம் மூக்கால் படித்துப் பார்க்க வேண்டும்) "டாய்! இப்படியாக்கும் என் அம்மா பண்ணுவாள். கேட்டியா" என்றான். அவன் கழுவிய அரிசி குறைவாக இருந்தது போல் தோன்றிற்று. "டேய் நீ போட்டிருக்கற அரிசி எனக்கே காணாது போலிருக்கே, நாம ரெண்டு பேரும் சாப்பிடணும்டா. இவ்வளவு போதுமா" என்று என் போறாத வேளைக்குக் கேட்டுத்தொலைத்தேன். "அப்படிங்கறியோ!!இன்னும் எவ்வளவு போடணுங்கறாய்" என்றான். "நீ வாங்கிண்டு வந்திருக்கறதே கொஞ்சமாத் தான் இருக்கு. அம்புட்டயும் போட்டுடேன்" என்றேன். பாஸ்மதி அரிசியின் எடை மற்ற அரிசிகளை விட எடை கூடுதலாக இருக்கும் என்று தெரியாது. அரைக்கிலோ அரிசியையும் போட்டு விட்டு அடுத்த கேள்வி எழுந்தது. எவ்வளவு தண்ணீர் வைக்க வேண்டும்? அப்போது தான் நான் ஒரு சூப்பர் டூப்பர் ஐடியா கொடுத்தேன். "டேய், அந்த குக்கர் மனுவலில், எவ்வளவு அரிசி வைத்தால் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று போட்டிருப்பான்" என்றேன். ஒரு வழியாக மனுவலை தேடியெடுத்துப் பார்த்தால், தண்ணீர் அளவு பற்றி ஒன்றுமே போடவில்லை. "இதே அமெரிக்காவில் நடந்திருந்தால், அந்த குக்கர் கம்பெனி மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம். நம் போராத வேளை, இந்தியாவில் இருக்கிறோம், என்று நொந்து கொண்டு, தோராயமா அரிசி முங்குகிற அளவுக்கு தண்ணீர் விட்டோம்.
குக்கரையும் அடுப்பிலேற்றி வைத்து அதன் மீது வெயிட் எல்லாம் போட்டாயிற்று. மணல் கயிறு விசு மாதிரி அதன் மேல் விபூதியோ குங்குமமோ இடாதது தான் குறை.
நண்பன் உருளைக்கிழங்கு கறி பண்ணுகிறேன் பேர்வழியென்று உருளைக்கிழங்கை நறுக்க ஆரம்பித்துவிட்டான். வெறும் சாதத்தையும் உருளைக்கிழங்கையும் எப்படி சாப்பிட. என்ன பண்ணுவது. கடலுக்குள் இறங்குவதென்று முடிவான பிறகு பின் வாங்க முடியுமா?
அடடா முதலில் உருளைக்கிழங்கை வெந்து வச்சுக்கணுங்கறது தெரியாமப் போயிடுத்தே என்று பிறகு தான் தெரிந்தது. சரி என்ன பண்ண, சாதம் ஆகும் வரை பொறுத்திருக்கலாம் என்றிருந்தோம். பத்து நிமிடங்களாகியும், விஸில் வராததால் எனக்கு லேஸாக சந்தேகம் வந்தது. இருந்தாலும் அடுப்பு பக்கம் போக பயம். விஸில் சத்தம் கேட்காமல் குக்கரைத் திறக்கக் கூடாது என்பது எங்கேயோ படித்த ஞாபகம் வேறு. நண்பன் குக்கர் மனுவலை தோண்ட ஆரம்பித்தான். "என்னடா தேடற" என்றதற்கு, "எவ்வளவு விஸில் வந்த பிறகு அடுப்பை அணைக்க ஏதாவது போட்டுருக்கா என்று பார்க்கிறேன் என்றேன். இந்த விபரமும் இல்லை. இரண்டு அபராதங்களுக்காக குக்கர் கம்பெனி மீது கேஸ் போட்டிருக்கலாம். சே. என்ன மனுவல் இது. அரை மணி நேரம் கழித்தும் விஸில் வராததால், அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் கழித்து திறந்தால், அரிசி இருக்கும் இடமே தெரியாமல் போய் எல்லாம் ஒரு பெரிய மாவுக் குழம்பாகி இருகிப் போயிருந்தது. அதுவும் குக்கரின் விளிம்பு வரை. ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோ ம். இப்படியாகிவிட்டதே என்று சிரிக்கவா, பசி வயிற்றைக் கிள்ளுகிறதே என்பதை நினைத்து அழவா என்று தெரியாமல் முழித்தோம். அப்படியும் நான் விடவில்லை. ஒரு spoon எடுத்து அந்த மாவையும் தின்ன ஆரம்பித்தேன். நமக்குத்தான் வெறும் சாதம் பிடிக்குமே. அதுவும் பாஸ்மதி அரிசின்னா சும்மாவா? ஆனா எவ்வளவு தான் சாப்பிட. இரண்டு வாய்க்குப்பிறகு ஒன்றும் உள்ளே போகவில்லை. வேறு வழியில்லாமல் எல்லாத்தையும் ஒரு plastic பையில் போட்டு குப்பையில் போட்டு விட்டு, ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் சாயாவும் குடித்துவிட்டு படுத்துக் கொண்டோம்.
இந்த சம்பவம் நடந்த பிறகும், சமையல் செய்யும் ஆர்வம் மட்டும் எனக்கு இன்னும் குறையவேயில்லை. என் சமையல் ருசியாக அமைவதும் இல்லை ;-((
எனது சமையல் அனுபவங்கள் (சமையல் என்ற பெயரில் நான் செய்த / செய்து கொண்டிருக்கும் சர்க்கஸ் கோமாளித்தனங்கள்) பற்றி எழுதவேண்டும் என்றால், ஒரு மெகா சீரியலே எடுக்கலாம். இருந்தாலும் என்னுடைய maiden சமையல் அனுபவத்தை நினைத்தால் இன்றும் விழுந்து விழுந்து சிரிப்பேன்.

11 comments:

Anonymous said...

டேய் விஜய்...அடப்பாவி...இவ்வளவு நாளா தெரியாம போச்சே...நான் யாருன்னு கண்டுபிடி...உனக்கு சொந்தக்காரன் தான் நானும்...:)
இப்போ தான் சொந்தக்கார வட்டத்தில ஒருத்தன் ப்ளாக் பண்ணறத பார்க்கிறேன்...

Welcome buddy...!!!

Anonymous said...

எப்பிடி இருக்க...எந்த ஊர்ல இருக்க இப்போ?

Vijay said...

Dai Ammanji, neeyaa daa ithu???
I am in Bangalore.

Dubukku said...

Nope wrong guess!!
its Ramesh Madhu's mama(Ambasamudram) if you remember. Thought you wud find out from my blog page as I had posted few pictures recently :)
Anyway nice to see you blogging. Hope everyone is fine at home.

Vijay said...

Hi Ramesh,
How are u doing? Nice to get a message from you. By the way, what is ur mail ID?

Dubukku said...

its r_ramn at yahoo dot com

Anonymous said...

Deara vijay,
This's Rajesh from US..Good job u r doing, keep it up..Could you please send pdf files of Ponnyin Selvan? I have been longing/searching for this since last year.
thanks a lot in adv,
Rajesh ( itsme_rk@yahoo.com )

Anonymous said...

Mr. Rajesh,

Ponniyin Selvan and some more Kalki stories (Sivakamiyin Sabatham, Parthiban Kanavu, Alai Osai) are available at Project Madurai as Pdf files.

Raj

செ. நாகராஜ் - C. Nagaraj said...

Dear Vijay,
உங்கள் சமையல் குறிப்பு செம தூள், நானும் சமைத்த புதிதில் இப்படித்தான், தண்ணி குறைவா வைச்சு குக்கரின் அடிப்பகுதியே உருமாறி விட்டது, அதை கொண்டு போய் கடைக்காரனிடம் சரி செய்ய கொடுத்த போது தண்ணீர் குறைவா வைச்சீங்களானு கேட்டு ஒரு பார்வை பார்த்தான் பாருங்க அது எப்பவும் மறக்கமுடியாது. இப்ப சாம்பார் ரசம் பொரியல் வரை சமைக்க தெரியும்

Ramya Ramani said...

பாவம் ரொம்ப கஷ்டபட்டிருக்கீங்க போல! இப்ப நல்லா சமைப்பீங்களா?

Vijay said...

\\பாவம் ரொம்ப கஷ்டபட்டிருக்கீங்க போல! இப்ப நல்லா சமைப்பீங்களா?\\

என் மனைவி சமைப்பதற்கு தடா போட்டு விட்டாள். எப்போதாவது தோசை வார்ப்பதோடு சரி :)